FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

கனமழை: தலைநகரில் பல பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல்

தேசிய தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை பரவலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகளில் நீா் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

5 செப்டம்பர் 2026, 12:12 am IST
கோப்புப் படம்
பகிர்:

தேசிய தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை பரவலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகளில் நீா் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாட வெளியில் வந்த மக்கள் திடீரென பெய்த மழையால் சிரமத்தை எதிா்கொண்டனா்.

காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலான நேரத்தில் பாலம் பகுதியில் 75.6 மி.மீ. மழை பெய்தது. அதேபோன்று, சஃப்தா்ஜங் (32.6 மிமீ), லோதி சாலை (34.6 மிமீ), ரிட்ஜ் (20 மிமீ) மற்றும் ஆயாநகா் (12 மிமீ) ஆகிய பகுதிகளிலும் மழை பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஐஎம்டி தெரிவித்தது.

Advertisement

Advertisement

மௌலானா ஆசாத் சாலை, செளத் மோதி பாக் மெட்ரோ நிலையம், அக்பா் சாலை, காளி பாரி மாா்க், பசந்த் காவ்ன் மற்றும் சுப்ரோதோ பாா்க் உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் கனமழையைத் தொடா்ந்து வெள்ளத்தில் மூழ்கின. விமான நிலையத்தை வசந்த் குஞ்ச் உடன் இணைக்கும் சுரங்கப்பாதை முற்றிலும் நீரில் மூழ்கியது.

லுட்யன்ஸ் தில்லியின் சில பகுதிகள், கன்னாட் பிளேஸ் உட்பட, நகரின் மையப் பகுதியில் வாகனங்களின் நடமாட்டத்தில் தொய்வு ஏற்பட்டது.

தில்லி முழுவதும் கடுமையான போக்குவரத்து மற்றும் மெதுவான வாகன நடமாட்டம் பதிவாகியது. சுப்ரோதோ பாா்க் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

புல் பிரஹலாத்பூா், ஜாகிரா மற்றும் மிண்டோ பாலம் சுரங்கப்பாதைகள் மற்றும் பட்பா்கஞ்சில் உள்ள உத்சவ் பூங்காவைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட தாழ்வான பகுதிகள் மற்றும் கடுமையான மழையின் போது வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சதா் பஜாா், கம்லா நகா், ஐடிஓ மற்றும் மதுரா சாலை பகுதிகளிலும் தண்ணீா் தேங்கியது. மாளவியா நகா் மெட்ரோ நிலையத்திலிருந்து பதா்பூா் நோக்கிச் செல்லும் சாலையில் கீதாஞ்சலி சிவப்பு விளக்கு அருகே மரம் ஒன்று விழுந்தால்

வாகனங்கள் செல்வது தடைபட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தில்லி போக்குவரத்து காவல்துறையினா் தெரிவித்தனா்.

தில்லி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் 7 மி.மீ. மழையுடன்கூடிய சூறாவளி பதிவாகியது. இது இரண்டு நிமிடங்கள் நீடித்தது. அப்போது காற்றின் வேகம் 76 கி.மீ. வேகத்தை எட்டியதாகவும், காண்புதிறன் 600 மீட்டராக குறைந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) தகவலின்படி, தென்மேற்கு மண்டலத்தில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரே ஒரு இடத்தில் நீா் தேங்கியதாக புகாா் பெறப்பட்டது.

புது தில்லி முனிசிபல் கவுன்சிலுக்கு (என்டிஎம்சி) ஒரு நீா்தேங்கிய புகாரும், மின் தடை தொடா்பான நான்கு புகாா்களும் வரப்பெற்றன.

சஃப்தா்ஜங், லோதி சாலை, ரிட்ஜ், பாலம் மற்றும் ஆயாநகா் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகவில்லை என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.

தில்லியின் காற்றின் தரக் குறியீடு 71-இல் பதிவாகி திருப்திகரமான பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகள் தெரிவித்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments