முகப்பு
கட்டுரைகள்

கிரக தோஷங்கள் நீக்கும் பெரியவாபுரம்!

நெல்வாய் பாளையத்தில் அமைந்துள்ள பெரியவாபுரம் பற்றி..

Updated On : 25 ஏப்ரல், 2026 at 5:54 PM
பெரியவாபுரம் - video crop
பகிர்:

குருவிற்காகக் கோயில் கட்ட வேண்டும் என்பது பலரின் ஆசை. ஆனால் அதை செயலாக்குவது சிலருக்கே சாத்தியம். அப்படிப்பட்ட அரிய பக்தர் ஒருவர் முதலீட்டிற்காக வாங்கிய இடத்தை, அம்மனுக்கும் குருமார்களுக்கும் அர்ப்பணித்து, அங்கே ஒரு குரு பீடத்தை நிர்மாணித்தார். இது அவரின் ஜாதகத்தில் கர்மாதிபதி யோகம் செயல்பட்டதன் வெளிப்பாடு.

விட்டலாபுரத்திலிருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் உள்ளது பெரியவாபுரம். எளிமை, ஆன்மிகம் மற்றும் தர்ம வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துக்கூறிய காஞ்சி மகா பெரியவாவின் தத்ரூபமான உருவத்துடன் அமைந்த மணிமண்டபம் ஒன்று அனைவரையும் மெய்சிலிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரியவாபுரம் சென்று வழிபட்டால் மனவலிமை அதிகரிக்கும். காஞ்சி முனிவரின் நினைவாகப் பல புனித மடங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், அமைதி நிறைந்த இந்த பீடம் மனதிற்கு நிறைவை அளிக்கின்றது.

பெரியவா கோயிலில் தினமும் பூஜைகள், வேத பாராயணங்கள் மற்றும் பல ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் அம்பாளுக்கு மட்டும் கோயில் கட்டும் எண்ணத்துடன் இக்கோயில் எழுப்பப்பட்டது. கோயில் கட்டும் ஆரம்ப பணிகளுக்கும் குருவின் ஆசிர்வாதம் பெறவும் காஞ்சி மடத்திற்குச் சென்றபோது, மகா பெரியவாவிற்கும் மற்றும் சீரடி சாய்பாபாவிற்குக் கோயில் கட்ட ஞானம் தோன்றியது. அதன்படி கோயில் மற்றும் மணிமண்டபங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வேத வியாசர் குரு பீடத்தில், குருமார்கள், அஷ்டலக்ஷ்மி, 12 ராசிகள், நவக்கிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரங்களுடன் சீரடி சாய்பாபா போன்றவை கட்டப்பட்டது. இது பல கிரக தோஷங்களை நிவர்த்தி செய்து நல்ல வழிகாட்டுதலை வழங்கும் கோயிலாகும்.

Advertisement

இக்கோயிலில் அருள்புரியும் தெய்வங்கள்

பால கணபதி, பாலமுருகர், சிவலிங்கம், ஸ்ரீனிவாச பெருமாள், பெரியவா, சீரடி சாய்பாபா, ஐயப்பன், ஆதிசங்கரர், ராமானுஜர், ராகவேந்திரர், காமாட்சி தாய், ஸ்ரீலஸ்ரீ பொன்முடி கோடி சுவாமிகள், காரை சித்தர், ஸ்ரீ கல்பாத்தி சித்தர் ஜீவ சமாதி, கோமாதா ஆதிஸ்தானம் உள்ளிட்டோர் அருள்பாலிக்கின்றனர்.

பூஜைகளும் பரிகாரங்களும்

இந்த கோயிலின் கும்பாபிஷேகம் 2023ம் ஆண்டு நடைபெற்றது. இங்குச் சனிக்கிழமைகளில் ஸ்ரீதேவி பூதேவி உடன் ஸ்ரீனிவாச பெருமாள் வழிபாடு, அனுஷத்தில் அபிஷேக ஆராதனை, பிரதோஷ பூஜைகள், சங்கடஹர சதுர்த்தி, குருபூஜை உள்ளிட்ட அனைத்து விசேஷ பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. பாக்கியம் உள்ளவர்கள் மட்டுமே பெரியவாபுரத்திற்கு செல்ல முடியும் என்று பக்தர்களின் கருத்து. இத்தலத்திற்கு வருவோர்களுக்குத் தீராத பிரச்னைகளில் இருந்து தீர்வு கிட்டும் என்பது நம்பிக்கை.

பெரியவாபுரம் குருபீடம், பித்ரு தோஷம் மற்றும் பல்வேறு கிரக தோஷங்களுக்கு பரிகாரம் செய்யும் புனித ஸ்தலமாகத் திகழ்கிறது. குலதெய்வம் தெரியாதவர்கள் இங்குப் பிரார்த்தனை செய்தால், தங்களின் குலதெய்வம் இருக்கும் இடத்தை காட்டிக் கொடுக்கும் என்பது பக்தர்களின் உறுதியான நம்பிக்கை. இங்கு எந்தவித பரிகாரக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

பெரியவபுரம் அமைந்துள்ள இடம்: சென்னை – பாண்டிச்சேரி இசிஆர் கடற்கரைச் சாலை அருகில், நெல்வாய் பாளையம், பவுஞ்சூர் அஞ்சல், செய்யூர் தாலுகா.

பெரியவா மற்றும் குருமார்களின் அருளால் இங்கு பல்வேறு பூஜைகளும் அன்னதான திட்டங்களும் நடைபெற்று, ஏழை மக்களுக்கு உதவி செய்யப்படுகிறது. ஜாதகத்தில் குருவின் அனுக்கிரகம் இருந்தால், குருவின் மணிமண்டபங்களை தரிசிக்கும் யோகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கு வருபவர்கள் மன அமைதி, நம்பிக்கை, மகிழ்ச்சி அடைகின்றனர். எளிமையும் பக்தியும் வாழ்க்கையின் உண்மையான செல்வம். அனைவரும் தரிசனம் செய்ய வேண்டிய புனித ஸ்தலம். இங்கு சித்திரை மாதத்தில் வரும் வருடாந்திர கும்பாபிஷேகம், சித்ரா பௌர்ணமி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

vaideeshwra2013@gmail.com

தொலைபேசி: 8939115647

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.