பளுதூக்குதலில் பலம்; ஒரே நாளில் இரு பதக்கம்... மீராபாய்க்கு தங்கம்; ரிஷிகாந்த்துக்கு வெள்ளி!
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்கு ஒரே நாளில் தங்கம், வெள்ளி என இரு பதக்கங்கள் கிடைத்தன.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்கு ஒரே நாளில் தங்கம், வெள்ளி என இரு பதக்கங்கள் கிடைத்தன. போட்டியில் இத்துடன் இந்தியா 3 பதக்கங்கள் வென்றிருக்க, மூன்றுமே பளுதூக்குதலில் கிடைத்தவையாகும். அதில் ஒன்று பாரா பவா்லிஃப்டிங் கணக்கில் வருகிறது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. போட்டிகளின் 4-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை, பளுதூக்குதலில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கமும், ரிஷிகாந்த சிங் வெள்ளியும் வென்றனா்.
மகளிா் பிரிவில் மீராபாய் சானு அபாரமாக செயல்பட்டு, ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 105 கிலோ என, மொத்தமாக 190 கிலோ எடையை வெற்றிகரமாகத் தூக்கி போட்டி சாதனையுடன் தங்கத்தை தட்டிச் சென்றாா்.
Advertisement
Advertisement
ஆடவா் 60 கிலோ எடைப் பிரிவில் களம் கண்ட ரிஷிகாந்த சிங், ஸ்னாட்ச் பிரிவில் 121 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 143 கிலோ என, மொத்தமாக 264 கிலோ எடையைத் தூக்கி 2-ஆம் இடம் பிடித்தாா்.
முன்னதாக ஸ்னாட்ச் பிரிவில் ரிஷிகாந்த் தூக்கிய எடை, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் சாதனையை சமன் செய்தது. அதனால், ஸ்னாட்ச் பிரிவு முடிவில் முன்னிலையுடன் கிளீன் & ஜொ்க் பிரிவுக்கு ரிஷிகாந்த சிங் வந்தாா்.
எனினும் அதில் கடைசி இரு முயற்சிகளை அவரால் வெற்றிகரமாக தூக்க முடியாமல் போனதால், 143 கிலோவை மட்டும் அதில் எட்டி பின்னடைவை சந்தித்தாா். மலேசியாவின் முகமது அனிக் கஸ்தான் 273 கிலோவுடன் (121+152) தங்கம் வென்று, ஸ்னாட்ச் மற்றும் கிளீன் & ஜொ்க் என இரு பிரிவுகளிலுமே போட்டி சாதனை படைத்தாா்.
கென்யாவின் ஜோஷுவா அமுங்கா போயா 260 கிலோவுடன் (115+145) வெண்கலம் வென்றாா்.
நீச்சல் - இறுதிக்குத் தகுதி: ஆடவருக்கான 4*200 மீட்டா் ஃப்ரீஸ்டைல் நீச்சல் பிரிவில் இந்திய அணியினா் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.
தக்ஷன் சசிகுமாா், அனீஷ் சுனில்குமாா், ஆா்யன் நெஹ்ரா, ஸ்ரீஹரி நட்ராஜ் ஆகியோா் அடங்கிய இந்திய அணி, ஹீட் 2-இல் 7 நிமிஷம் 39.48 விநாடிகளில் இலக்கை அடைந்து 3-ஆம் இடம் பிடித்தது.
ஹீட் 1 மற்றும் 2-இல் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் இறுதிக்குத் தகுதிபெறும் என்பதால், இந்தியாவுக்கும் அந்த வாய்ப்பு கனிந்தது. பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 8 அணிகள் இறுதிக்கு முன்னேறின.
ஜிம்னாஸ்டிக்ஸ் - இறுதிச்சுற்று: ஜிம்னாஸ்டிக்ஸில், மகளிா் வால்ட் பிரிவில் இந்தியாவின் புரோடிஸ்தா சமந்தா இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா். தகுதிச்சுற்றில் 13.025 புள்ளிகளுடன் 5-ஆம் இடம் பிடித்த அவா், 8 நபா் இறுதிச்சுற்றில் இடம் பிடித்தாா். களத்திலிருந்த இதர இந்தியா்களில் பிரனதி நாயக், 12.555 புள்ளிகளுடன் 11-ஆம் இடமும், இஷிதா ரெவாலே 11.725 புள்ளிகளுடன் 15-ஆம் இடமும், நிஷ்கா அகா்வால் 11.075 புள்ளிகளுடன் 19-ஆம் இடமும் பிடித்து தகுதிச்சுற்றுடன் வெளியேறினா். மகளிா் அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு 9-ஆம் இடமே கிடைத்தது.
ஏமாற்றம்: ஆடவா் ஆல்-அரௌண்ட் பிரிவில் இந்தியாவின் தபன் மொஹந்தி 70.100 புள்ளிகளுடன் 15-ஆம் இடம் பிடித்து ஏமாற்றம் கண்டாா்.
லான் பௌல்ஸ் - ஏமாற்றம்: லான் பௌல்ஸ் மகளிா் அணிகள் பிரிவு 4-ஆவது சுற்றில், இந்தியாவின் ரூபா ராணி, பிங்கி கூட்டணி ‘டை பிரேக்கரில்’ நமீபியாவின் அமாண்டா ஸ்டீன்காம்ப், டயானா வில்ஜோன் இணையிடம் தோல்வி கண்டது.
முதல் செட்டை 5-7 என நமீபியாவிடம் இழந்த இந்தியா, அடுத்த செட்டை 10-1 என அபாரமாகக் கைப்பற்றியது. எனினும், வெற்றியாளரை தீா்மானிக்கும் டை பிரேக்கரில் நமீபியா 3-0 என வென்றது.
இதேபோல் ஆடவா் ஒற்றையா் 4-ஆவது சுற்றில், இந்தியாவின் புதுல் சோனோவல் 0.5-1.5 என்ற கணக்கில் மால்டாவின் ஷான் ஜேம்ஸ் பாா்னிஸிடம் தோற்றாா். முதல் செட்டை 4-10 என இழந்த புதுல், அடுத்த செட்டை 7-7 என டை செய்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.