கற்றுக்குட்டிகளின் கனவு நனவாகுமா? டி20 உலகக் கோப்பையில் ஜொலிக்கப் போவது யார்?
கற்றுக்குட்டிகளின் கனவு பலிக்குமா? டி20 உலகக் கோப்பையில் ஜொலிக்கப் போவது யார்? என்பதைப் பற்றி...
டி20 உலகக் கோப்பை தொடரில் கற்றுக்குட்டி அணிகள் தங்கள் வீரத்தையும் வேகத்தையும் காட்ட முனைப்பு காட்டி வருகின்றன.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறவிருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில் அணிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தில்லி, சென்னை உள்பட 5 இடங்களில் மொத்தமாக 55 போட்டிகள் நடைபெறுகின்றன.
குரூப் ஏ-வில் இந்தியா, அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஓமன் ஆகிய அணிகளும், குரூப் சி-யில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஸ்காட்லாந்து, இத்தாலி, நேபாளம் ஆகிய அணிகளும், குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கனடா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. உலகக் கோப்பைக்கு இன்னும் ஓரிரு நாள்களே இருக்கும் நிலையில் மொத்தமுள்ள 20 அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
இந்தியா - வங்கதேசம் இடையேயான மோதல்போக்கு காரணமாக, தங்களுக்கான போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது. ஆனால், வங்கதேசத்தின் கோரிக்கைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முற்றிலுமாக மறுத்ததால், டி20 உலகக் கோப்பைத் தொடரை வங்கதேச அணி புறக்கணித்தது. இதன் விளைவாக வங்கதேச அணி நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற முதன்மை அணிகளுக்கு மத்தியில் அவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்ற நோக்குடன் மிகச் சிறிய வறிய நிலையில் உள்ள நாடுகளிலிருந்தும் மிகப் பெரிய கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான டி20 உலகக் கோப்பையில் கலந்து கொள்ள இந்தியா மற்றும் இலங்கை வந்து தீவிர பயிற்சியில் அணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கிரிக்கெட்டை மட்டும் முதன்மையாகக் கொண்டு விளையாடி வருகின்றனர். ஆனால், நமீபியா, அமெரிக்கா, ஸ்காட்லாந்து, இத்தாலி, நேபாளம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தங்கள் நாட்டில் வேறு வேலைகளையும் பார்த்துக் கொண்டு நாட்டிற்காகவும் விளையாடி வருகின்றனர். மேலும், போதிய இடவசதி, உபகரணங்கள் இல்லாமை போன்றவைகளும் அவர்களுக்கு பெருந்தலைவலியாக அமைந்திருக்கிறது.
வங்கதேசத்துக்கு ஆதரவாக பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பைத் தொடரில் இருந்து விலகிவிடும் என தகவல்கள் வெளியான நிலையில், பாகிஸ்தானுக்குப் பதிலாக ஐஸ்லாந்து அணி தேர்வாக இருந்தது. ஆனால், போதிய உபகரணங்கள் இல்லாமல், போதிய பண ஆதரவுமின்றி நாங்கள் தேர்வானாலும் போட்டியில் விளையாட முடியாத மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கிறோம் என்றும் ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒருவேளை பாகிஸ்தான் அணி விலகினால்கூட அந்த இடத்தை நிரப்ப உகாண்டா அணி காத்துக்கொண்டு இருக்கிறது.
உலகக் கோப்பைத் தொடரில் இந்த மாதிரியான சின்ன சின்ன அணிகளின் வெற்றிகள் மற்ற அணிகளுக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் அமையும். குறிப்பாக இத்தாலி அணியெல்லாம் முதல்முறையாக டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கிறது.
ஒரு காலத்தில் கத்துக்குட்டியாகக் கருதப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி டி20 லீக் தொடர்களின் வளர்ச்சியாலும், வீரர்களின் அனுபவத்தாலும் பெரிய அணிகளையே மண்ணைக் கவ்வ வைத்துவிடும் அளவுக்கு வளர்ந்துவிட்டது.
கடந்த 2024 டி20 உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி முதல்முறையாக அரையிறுதி வரை முன்னேறியிருந்தது.
இந்தாண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் உலகக் கோப்பையில் தொடரில் ஆடுகளங்கள் பேட்டிங்க்கு உகந்த ஆடுகளங்களாகவே இருக்கும். அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து, ஓமன், ஸ்காட்லாந்து, இத்தாலி, நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், கனடா போன்ற சிறிய நாடுகள் தங்கள் திறமைகளை சுமாராக காண்பித்தால்கூட, அந்த அணிகள் குறுகிய வடிவிலான (20 ஓவர்கள் போட்டி) தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வழிகோலிடும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.
வலிமையில் சிறிய அணிகளாகத் தோன்றினாலும், சில நேரங்களில் மிகப்பெரிய அணிகளுக்கு சவாலாகவும் சிம்ம சொப்பனமாகவும் திகழ்வதும் உண்டு. 2007 ஆம் ஆண்டு முதலாவது உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றில் ஜிம்பாப்வேயிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வியதும் மறக்க முடியாத ஆட்டங்களில் ஒன்றாகும்.
இதேபோல் 2009 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடக்க லீக்கில் இங்கிலாந்து அணி நெதர்லாந்திடம் உதைவாங்கியது. 2022 ஆம் ஆண்டு தொடரில் நமீபியா அணி லீக் சுற்றில் இலங்கையை 55 ரன்கள் வித்தியாசத்தில் காவு வாங்கியதும் நினைவுகூரத்தக்கது.
In the T20 World Cup tournament, the minnow teams are showing keen determination to display their prowess and speed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.