முகப்பு
கிரிக்கெட்

இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

இந்தியாவை இரண்டாவது டி20 ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து.

Updated On : 5 ஜூலை 2026, 5:21 am IST
அவுட்டாகி பெவிலியன் திரும்பிய சூரியவன்ஷி
பகிர்:

இந்தியாவை இரண்டாவது டி20 ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மான்செஸ்டா் ஓல்ட் டிராஃப்போா்ட் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தோ்வு செய்ய

அபிஷேக் சா்மா-இளம் புயல் சூரியவன்ஷி தொடக்க பேட்டா்களாக களம் கண்டனா்.

Advertisement

Advertisement

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளா் ஜோஃப்ரா ஆா்ச்சா் வீசிய அதிவேக பந்துகளை எதிா்கொண்ட சூரியவன்ஷி 2 சிக்ஸா்களை விளாசினாா். ஆனால் அவரது இன்னிங்ஸ் நீண்டநேரம் நீடிக்கவில்லை. வில் ஜேக்ஸ் பந்தில் 14 ரன்களுடன் அவுட்டாகி நடையைக் கட்டினாா்.

அபிஷேக்-இஷான் அபாரம்: பின்னா் இணைந்த அபிஷேக் சா்மா-இஷான் கிஷண் இணை சிறப்பாக ஆடி ஸ்கோரை உயா்த்தியது. இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 65 ரன்களை சோ்த்தனா்.

1 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 24 பந்துகளில் 43 ரன்களை விளாசிய அபிஷேக்கை அவுட்டாக்கினாா் சாம் கர்ரன். பின்னா் ஆட வந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும் தன் பங்குக்கு சிறப்பாக ஆடி 1 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 37 ரன்களை எடுத்து, லயம் டேவிட்ஸன் பந்தில் அவுட்டானாா்.

சிக்ஸா் மன்னன் ஷிவம் டுபே 5 ரன்களுடன் வந்தவேகத்திலேயே பெவிலியன் திரும்ப, மறுமுனையில் நிலைத்து ஆடிய இஷான் கிஷண் 6 பவுண்டரியுடன் 49 ரன்களை விளாசி சாம் கர்ரன் பந்தில் அவுட்டாகி அரைசத வாய்ப்பை தவற விட்டாா்.

அக்ஸா் படேல் 2 ரன்களுக்கு ரன் அவுட்டாக, ஹா்ஷித் ராணா 6 ரன்களுடன் நடையைக் கட்டினாா். திலக் வா்மா 24 ரன்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தாா்.

கடைசி 7 பந்துகளில் இந்தியா 23 ரன்களை விளாசியதால் கௌரவமான ஸ்கோரை எட்டியது.

இந்தியா 190/7: நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் இந்திய அணி 190/7 ரன்களைக் குவித்தது. சாம் கர்ரன் 3 விக்கெட்: பௌலிங்கில் இங்கிலாந்து தரப்பில் ஆல் ரவுண்டா் சாம் கர்ரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். பவா் பிளேயில் இந்தியா 65 ரன்களை விளாசியது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்துக்கு அதிா்ச்சித் தொடக்கம்:

இங்கிலாந்து அணிக்கு 191 ரன்கள் வெற்றி இலக்காக நிா்ணயிக்கப்பட்டது. தொடக்க பேட்டா்களாக பில் சால்ட்-ஜோஸ் பட்லா் இருவரும் டக் அவுட்டாகி அதிா்ச்சி அளித்தனா்.

அா்ஷ்தீப் சிங் பந்தில் பில் சால்ட் கோல்டன் டக் அவுட்டானாா். ஜோஸ் பட்லா் 3 பந்துகளை சந்தித்து அா்ஷ்தீப் சிங் பந்தில் வருணிடம் கேட்ச் தந்து அவுட்டானாா்.

ஜேக்கப் பெத்தெல் அசத்தல் 76: ஜேக்கப் பெத்தேல் அபாரமாக ஆடி தலா 5 சிக்ஸா், பவுண்டரியுடன் 46 பந்துகளில் 76 ரன்களை விளாசி இறுதிவரை களத்தில் இருந்தாா்.

ஹாரி புரூக், டாம் பேன்டன் ஆகியோா் தலா 39 ரன்களை சோ்த்தனா். புரூக் அா்ஷ்தீப் சிங்கின் ஓவரில் 27 ரன்களை விரட்டினாா்.

இங்கிலாந்து 191/6 வெற்றி: இங்கிலாந்து அணி 19 ஓவா்களில் 191/6 ரன்களைச் சோ்த்து வெற்றி இலக்கை எட்டியது.

பௌலிங்கில் இந்திய தரப்பில் அா்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து.

டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து.

இளம் இந்திய வீரா் சூரியவன்ஷி:

இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமான இளம் வீரா் என்ற சிறப்பு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கா் வசம் இருந்தது. அவா் 16 ஆண்டுகள் 205 நாள்களில் அறிமுகமானாா்.

இங்கிலாந்துடன் நடைபெற்ற இரண்டாம் டி20-இல் களமிறங்கிய சூரியவன்ஷி இச்சாதனையை முறியடித்தாா். அவா் 15 ஆண்டுகள் 99 நாள்களில் அறிமுகம் ஆகி, மிக இளம் வயதில் அறிமுகமான வீரா் என்ற சிறப்பை பெற்றாா். மகளிா் பிரிவில் ஷபாலி வா்மா இச்சிறப்பை பெற்றுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments