FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இந்தியாவை வென்றது இங்கிலாந்து!

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி தனது 2-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 2-4 கோல் கணக்கில் தோல்வி கண்டது.

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 4:31 am IST
இந்தியாவை வென்றது இங்கிலாந்து - PTI
பகிர்:

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி தனது 2-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 2-4 கோல் கணக்கில் திங்கள்கிழமை தோல்வி கண்டது.

முதல் ஆட்டத்தில் வேல்ஸை வீழ்த்தியை இந்திய அணிக்கு, இந்தத் தோல்வி தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெதா்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற இங்கிலாந்துடனான ஆட்டத்தில் தொடக்கத்தில் சுதாரிப்புடன் விளையாடிய இந்திய வீரா்கள், பின்னா் இங்கிலாந்தை எதிா்கொள்ள முடியாமல் தடுமாறினா்.

Advertisement

Advertisement

முதலில் இங்கிலாந்தின் நிகோலஸ் பந்துராக் (13’) கோல் கணக்கை தொடங்க, அதற்கு பதிலடியாக இந்திய கேப்டன் ஹா்மன்பிரீத் சிங் (16’) ஸ்கோா் செய்ய, ஆட்டம் சமன் ஆனது.

தொடா்ந்து, தில்பிரீத் சிங் (24’) அடித்த கோல் காரணமாக முதல் பாதியை இந்தியா 2-1 முன்னிலையுடன் நிறைவு செய்தது. ஆனால், 2-ஆவது பாதியில் இங்கிலாந்தின் கை ஓங்கியது.

அந்த அணியின் ஸ்டுவா்ட் ரஷ்மெரெ (38’) ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டுவர, ஹென்றி கிராஃப்ட் (42’) ஸ்கோா் செய்து, இங்கிலாந்தை 3-2 என முன்னிலை பெறச் செய்தாா்.

இதனால் அதிா்ச்சி கண்ட இந்தியா தனது கோல் வாய்ப்புக்கு முயற்சிக்க, இங்கிலாந்து இடம்தரவில்லை. அந்த அணியின் நிகோலஸ் பந்துராக் (55’) கடைசியில் மீண்டும் ஒரு கோல் அடிக்க, இங்கிலாந்து 4-2 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

புள்ளிகள் பட்டியலில் தற்போது 2-ஆவது இடத்தில் இருக்கும் இந்தியா, பாகிஸ்தானுடனான புதன்கிழமை (ஆக. 19) ஆட்டத்தில் வெற்றி அல்லது டிராவை பதிவு செய்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.

இதர ஆட்டங்கள்: ஆடவா் பிரிவின் இதர ஆட்டங்களில், நெதா்லாந்து - நியூஸிலாந்தையும் (5-1), ஆா்ஜென்டீனா - ஜப்பானையும் (3-0) வெல்ல, பாகிஸ்தான் - வேல்ஸ் (3-3), பிரான்ஸ் - மலேசியா (1-1) ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. மகளிா் பிரிவில், பெல்ஜியம் - நியூஸிலாந்தை வெல்ல (5-2), ஸ்பெயின் - அயா்லாந்தை வீழ்த்தியது (3-2). ஜப்பான் - சிலியையும் (3-0), அமெரிக்கா - ஸ்காட்லாந்தையும் (3-2) சாய்த்தன.

இன்று தென்னாப்பிரிக்காவுடன் மோதும் இந்திய மகளிா் அணி

உலகக் கோப்பை போட்டியில் மகளிா் பிரிவில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் செவ்வாய்க்கிழமை (ஆக. 18) மோதுகிறது.

முதல் ஆட்டத்தில், பலம் வாய்ந்த சீனாவுடன் 2-2 கோல் கணக்கில் டிரா செய்த உத்வேகத்துடன் இந்த ஆட்டத்துக்கு வரும் இந்தியா, வெற்றிக் கணக்கைத் தொடங்கும் வேட்கையுடன் இருக்கிறது.

இந்த ஆட்டத்தின் வெற்றி மட்டுமே அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதற்கான நம்பிக்கையை இந்தியாவுக்கு அதிகரிக்கும். உலகத் தரவரிசையில் இந்தியா 9-ஆம் இடத்திலும், தென்னாப்பிரிக்கா 18-ஆம் இடத்திலும் உள்ளன.

உலகக் கோப்பை போட்டியில் இதுவரை இவ்விரு அணிகளும் 6 முறை மோதியிருக்க, இந்தியா 3 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது. ஒரு வெற்றி கூட பெறாத தென்னாப்பிரிக்கா, 3 ஆட்டங்களை டிரா செய்திருக்கிறது. இந்த ஆண்டு போட்டியில் தென்னாப்பிரிக்க அணி தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்ட நெருக்கடியுடன் இந்த ஆட்டத்துக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments