இந்திய அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வானது எப்படி?
இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டு, ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து...
இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சூர்யகுமார் யாதவ், கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி இம்மாத இறுதியில் அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதன் பின், இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.
இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் மிகவும் மோசமாக இருப்பதாலும், அடுத்த ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரை கருத்தில் கொண்டும் அவர் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்படலாம் எனக் கூறப்பட்டு வந்தது. அதேபோல, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டபோது, சூர்யகுமார் யாதவ் அணியிலிருந்து நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக தேர்வானது எப்படி?
இந்திய அணியின் நடுவரிசை ஆட்டக்காரரான ஷ்ரேயாஸ் ஐயர், கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடியிருந்தார். அதன் பின், அவர் தற்போது மீண்டும் தேசிய அணியில் இணைந்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் அற்புதமான ஃபார்மில் இருக்கிறார். கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அதற்கு அடுத்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர், அந்த அணியை இறுதிப்போட்டி வரை முன்னேறச் செய்தார். தலைமைப் பண்பு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டார். அவரது கடின உழைப்பு அவரை இந்திய அணியின் கேப்டனாக மாற்றியுள்ளது என்றே கூறலாம்.
இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் அறிவிக்கப்பட்டது குறித்து அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளாக அவர் அணிகளை எப்படி வழிநடத்துகிறார், எப்படி விளையாடுகிறார் என்பதை நாம் பார்த்துள்ளோம். அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுத்ததிலிருந்து, கடினமான சூழலில் அணியை எப்படி வழிநடத்துவது என்பது வரை அவரிடம் பல விஷயங்களைப் பார்க்க முடிந்தது. கேப்டனாக அவரால் சிறப்பாக செயல்பட முடியும் எனத் தோன்றுகிறது. அவர் மிகவும் நன்றாக பேட்டிங் செய்து ரன்களும் குவிக்கிறார். டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெறுவதற்கும் அவர் மிக அருகில் இருக்கிறார்.
சூர்யகுமார் யாதவுக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த இந்திய அணியை வழிநடத்திய அவர் அணியில் இடம்பெறாதது கடினமான முடிவு. ஆனால், உலகக் கோப்பை நிறைவடைந்த பிறகு அணி எப்படி இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்து இது போன்ற மாற்றங்கள் செய்வது பலமுறை நடைபெற்றுள்ளது. சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் கவலையளிப்பதாக உள்ளது. அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன. அதனைக் கருத்தில் கொண்டு அணியின் நலன் கருதி இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சூர்யகுமார் யாதவ் அணியில் இல்லாதது எளிதாக எடுக்கப்பட்ட முடிவு கிடையாது என்றார்.
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் வருகிற ஜூன் 26 ஆம் தேதியும், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் வருகிற ஜூலை 1 ஆம் தேதியும் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
Regarding how Suryakumar Yadav was removed from the Indian team's captaincy and Shreyas Iyer was selected as the captain...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.