கடைசி ஒருநாள்: கூப்பர் கானலி அதிரடி; பரபரப்பான ஆட்டத்தில் ஆஸி. த்ரில் வெற்றி!
வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
வங்கதேசம் - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டாக்காவில் இன்று (ஜூன் 14) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
மூவர் அரைசதம் விளாசல்; ஆஸ்திரேலியாவுக்கு 275 ரன்கள் இலக்கு!
Advertisement
Advertisement
முதலில் விளையாடிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக தௌகித் ஹிரிடாய் 88 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, லிட்டன் தாஸ் 58 ரன்களும், மொசாதேக் ஹொசைன் 56 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர். கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டே 24 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியா தரப்பில் சேவியர் பார்ட்லெட் மற்றும் மாட் ரென்ஷா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பென் துவார்ஷூயிஸ் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
கூப்பர் கானலி சதம் விளாசல்; ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 49.3 ஓவர்களில் இலக்கை எட்டி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
அந்த அணியில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் கூப்பர் கானலி ஒருநாள் போட்டிகளில் அவரது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அதிரடியாக விளையாடி ஆட்டத்தை இறுதிவரை எடுத்துச் சென்ற அவர், 49-வது ஓவரில் ஆட்டமிழந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அவர் 134 பந்துகளில் 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.
கூப்பர் கானலி ஆட்டமிழந்த பிறகு, ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 4 ரன்களும், வங்கதேசத்தின் வெற்றிக்கு ஒரு விக்கெட்டும் தேவைப்பட்டது. இருப்பினும், கடைசி ஓவரில் ஆடம் ஸாம்பா பவுண்டரி அடித்ததால் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
கூப்பர் கானலியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மார்னஸ் லபுஷேன் 29 ரன்களும், கேமரூன் கிரீன் மற்றும் ஆலிவர் பீக் தலா 27 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ஜோஷ் இங்லிஷ் 21 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
வங்கதேசம் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷோரிஃபுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். டஸ்கின் அகமது, முஷ்தபிசூர் ரஹ்மான் மற்றும் மஹேதி ஹாசன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
ஒருநாள் தொடரை ஏற்கனவே 0-2 என ஆஸ்திரேலிய அணி இழந்துவிட்ட நிலையில், கடைசி ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது.
In the third ODI against Bangladesh, the Australian team secured a thrilling victory by one wicket.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.