ஹார்திக் பாண்டியாவை வாங்க போட்டியிடும் கேகேஆர், ராஜஸ்தான் ராயல்ஸ்?
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவை வாங்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவை வாங்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஹார்திக் பாண்டியா, கடந்த 2022 ஆம் ஆண்டு புதிதாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடினார். அவரது தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுகமான முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
குஜராத் டைட்டன்ஸ் அணியை இரண்டு சீசன்கள் கேப்டனாக வெற்றிகரமாக வழிநடத்திய ஹார்திக் பாண்டியா, கடந்த 2024 ஆம் ஆண்டு தனது பழைய அணியான மும்பை இந்தியன்ஸில் இணைந்தார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்ததிலிருந்து பல்வேறு சவால்களை சந்தித்தார். கடந்த மூன்று சீசன்களில் ஹார்திக் தலைமையிலான மும்பை அணி ஒரு முறை மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
Advertisement
Advertisement
ஹார்திக் பாண்டியாவை வாங்க போட்டியா?
மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஹார்திக் பாண்டியாவின் பயணம் சிறப்பாக அமையவில்லை. மும்பை அணியில் பல்வேறு குழப்பங்கள் இருப்பது அந்த அணியின் செயல்பாடுகளில் வெளிப்பட்டது. மேலும், அணிக்குள் கேப்டன் பொறுப்புக்கான போட்டி நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், ஹார்திக் பாண்டியா மும்பை அணியை விட்டு வெளியேறி வேறு அணிக்கு செல்லவுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், ஹார்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் வாங்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மும்பை அணி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஐபிஎல் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அஜிங்க்யா ரஹானே தொடரப் போவதில்லை. அவர் தற்காலிகமாகவே கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவர் அணியிலிருந்து விடுவிக்கப்படுவார். கொல்கத்தா அணி நிர்வாகம் மும்பை அணி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த இரண்டு அணி நிர்வாகங்களுக்குள்ளும் சில சுற்று பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. ஹார்திக் பாண்டியா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குச் சென்றால், அவர் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ரிங்கு சிங்கை கேப்டனாக நியமிக்கலாம் என்றாலும், அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்க இது சரியான நேரமாக இருக்காது என அணி நிர்வாகம் நினைக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மட்டுமின்றி, ஹார்திக் பாண்டியாவை டிரேடிங் மூலம் வாங்குவதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை அணி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வாலை மும்பை அணிக்கு கொடுத்துவிட்டு, ஹார்திக் பாண்டியாவை வாங்க ராஜஸ்தான் ராயல்ஸ் திட்டமிடுகிறது. ஆனால், அந்த அணியை இளம் வீரர் ரியான் பராக் கேப்டனாக சிறப்பாக வழிநடத்தி வருவதால் ஹார்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்குவது கடினம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reports indicate that the Kolkata Knight Riders and Rajasthan Royals are in talks to acquire Mumbai Indians captain Hardik Pandya.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.