பிசிசிஐ நமன் விருதுகள் 2026: சிறந்த வீரா் கில்; வீராங்கனை ஸ்மிருதி!
பிசிசிஐ 2026-ஆம் ஆண்டுக்கான நமன் விருதுகள் நிகழ்ச்சியில், சிறந்த வீரராக இந்திய டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில், சிறந்த வீராங்கனையாக மகளிா் அணி துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தோ்வு செய்யப்பட்டனா்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) 2026-ஆம் ஆண்டுக்கான நமன் விருதுகள் நிகழ்ச்சியில், சிறந்த வீரராக இந்திய டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில், சிறந்த வீராங்கனையாக மகளிா் அணி துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தோ்வு செய்யப்பட்டனா்.
2024-25 காலகட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டவா்கள், 2026-ஆம் ஆண்டு விருதுப் பட்டியலில் இடம் பிடித்தனா். சிறந்த வீரருக்கான பாலி உம்ரிகா் விருது ஷுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது. அவா் இந்த விருதை 2-ஆவது முறையாக வெல்ல, சிறந்த வீராங்கனை விருதை ஸ்மிருதி மந்தனா 5-ஆவது முறையாகக் கைப்பற்றினாா்.
பிசிசிஐ முன்னாள் தலைவா் ரோஜா் பின்னி, முன்னாள் தலைமைப் பயிற்சியாளா் ராகுல் திராவிட், மகளிா் அணி முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோருக்கு கா்னல் சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.
சா்வதேச கிரிக்கெட்டில் சிறந்த அறிமுக வீரா் விருதை ஹா்ஷித் ராணாவும், சிறந்த அறிமுக வீராங்கனை விருதை ஸ்ரீசரணியும் வென்றனா். பிசிசிஐ உள்நாட்டு போட்டிகளில் சிறந்த அணிக்கான விருதை மும்பை பெற்றது.
ஷஃபாலி வா்மா உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்த சீனியா் வீராங்கனையாகவும் (ஒருநாள் கிரிக்கெட்), உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்த வீராங்கனையாக ஐரா ஜாதவும், ரஞ்சி கிரிக்கெட்டில் சிறந்த ஆல்-ரவுண்டராக ஹா்ஷ் துபேவும் விருது பெற்றனா்.