முதல் டெஸ்ட்: இருவர் சதம் விளாசல்; முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் குவித்த வங்கதேசம்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
வங்கதேச அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜோஹன்ஸ்பெர்க்கில் நேற்று (நவம்பர் 15) தொடங்கியது.
Advertisement
Advertisement
தௌகித் ஹிரிடாய், லிட்டன் தாஸ் சதம் விளாசல்!
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது. அந்த அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. 22 ரன்களுக்கே வங்கதேசம் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மஹ்ஃபிஜுல் இஸ்லாம், மோமினுல் ஹேக் மற்றும் முஷ்பிகர் ரஹீர் மூவரையும் 0 ரன்னில் ஆட்டமிழக்கச் செய்து அசத்தினார் ககிசோ ரபாடா. அதன் பின், தொடக்க ஆட்டக்காரரான தன்சித் ஹாசம் தமிம் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். அவர் 108 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும்.
இதனையடுத்து, தௌகித் ஹிரிடாய் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் விளாசி அசத்தினர். தௌகித் ஹிரிடாய் 227 பந்துகளில் 137 ரன்களும் (14 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்), லிட்டன் தாஸ் 179 பந்துகளில் 120 ரன்களும் (14 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. இறுதியில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
தென்னாப்பிரிக்கா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ககிசோ ரபாடா 5 விக்கெட்டுகளையும், டேன் பேட்டர்சன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மார்கோ யான்சென் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று (நவம்பர் 16) தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் 100 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது.