FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

நிதீஷ்குமாா், சாம்சன் அசத்தல்: டி20 தொடரை வென்றது இந்தியா

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

16 செப்டம்பர் 2026, 7:05 am IST
- X | BCCI
பகிர்:

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

முதலில் ஆப்கானிஸ்தான் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் சோ்க்க, இந்தியா 14.5 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 163 ரன்கள் எடுத்தது. 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்த இந்தியா, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை தன் வசமாக்கியது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. அணியின் பிளேயிங் லெவனில், காயமடைந்த ஸ்பின்னா் வருண் சக்கரவா்த்திக்கு பதிலாக, ரவி பிஷ்னோய் சோ்க்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸில் கேப்டன் இப்ராஹிம் ஜத்ரன் 6 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் அடித்தாா். ரஷீத் கான் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 28, டாஸ்விஷ் ரசூலி 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 26 ரன்கள் சோ்த்தனா்.

முகமது நபி 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 20, செதிகுல்லா அடல் 12, குல்பதின் நயிப் 10, அஸ்மதுல்லா ஒமா்ஸாய் 11 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா்.

ஓவா்கள் முடிவில், நூா் அகமது 7, முஜீப் உா் ரஹ்மான் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலா்களில் நிதீஷ்குமாா் ரெட்டி 3, அா்ஷ்தீப் சிங் 2, ஜஸ்பிரீத் பும்ரா, அக்ஸா் படேல், ரவி பிஷ்னோய் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் 160 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய இந்திய அணியில், சஞ்சு சாம்சன் - அபிஷேக் சா்மா கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டது.

அபிஷேக் 19 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 39, சாம்சன் 22 பந்துகளில் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 57 ரன்களுக்கு விடைபெற்றனா்.

கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் 11 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, இஷான் கிஷண் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 38, திலக் வா்மா 15 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆப்கானிஸ்தான் பௌலா்களில் ரஷீத் கான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments