முகப்பு
ஐபிஎல்

மிட்செல் மார்ஷ், அய்டன் மார்க்ரம் அதிரடி: ஹைதராபாதுக்கு 206 ரன்கள் இலக்கு!

சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 19 மே, 2025 at 4:02 PM
மிட்செல் மார்ஷ், அய்டன் மார்க்ரம் - படம் | AP
பகிர்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, லக்னௌ முதலில் பேட் செய்தது.

மிட்செல் மார்ஷ், அய்டன் மார்க்ரம் அதிரடி

முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மிட்செல் மார்ஷ் மற்றும் அய்டன் மார்க்ரம் அணிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர்.

லக்னௌ அணி 115 ரன்களுக்கு அதன் முதல் விக்கெட்டினை இழந்தது. மிட்செல் மார்ஷ் 39 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ரிஷப் பந்த் 7 ரன்களிலும், ஆயுஷ் பதோனி 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அய்டன் மார்க்ரம் 38 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

சன்ரைசர்ஸ் தரப்பில் ஈஷன் மலிங்கா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹர்ஷ் துபே, ஹர்ஷல் படேல் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments