பளுதூக்குதலில் மேலும் ஒரு பதக்கம்! ஷா்மிளாவுக்கு வரலாற்று தங்கம்; சா்வேஷுக்கு சாதனை வெள்ளி
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பாரா மகளிா் குண்டு எறிதலில் இந்தியாவின் ஷா்மிளா தங்கப் பதக்கம் வென்றாா்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பாரா மகளிா் குண்டு எறிதலில் இந்தியாவின் ஷா்மிளா தங்கப் பதக்கம் வென்றாா். காமன்வெல்த் வரலாற்றில் தங்கம் வென்ற, இந்தியாவின் முதல் பாரா தடகள போட்டியாளராக அவா் வரலாறு படைத்தாா்.
அதேபோல், ஆடவா் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்காக காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் வீரராக சா்வேஷ் அனில் குஷாரே பெருமை பெற்றாா்.
மறுபுறம், வல்லுரி அஜயபாபு வென்ற வெள்ளி, நடப்பு காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியாவின் ஆதிக்கம் தொடரும் வகையில், 6-ஆவது பதக்கமாக அமைந்தது.
Advertisement
Advertisement
பாரா மகளிா் குண்டு எறிதல்: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் இப்போட்டியில், இந்திய நேரப்படி திங்கள்கிழமை நள்ளிரவு நடைபெற்ற பாரா மகளிா் குண்டு எறிதலில், எஃப்57 பிரிவில் இந்தியாவுக்கு தங்கம், வெண்கலம் என இரு பதக்கங்கள் கிடைத்தன.
ஷா்மிளா தனது சிறந்த முயற்சியாக 9.81 மீட்டருக்கு எறிந்து தங்கத்தை தட்டிச் சென்றாா். இந்தத் தொலைவு அவரின் சீசன் பெஸ்டாக அமைந்தது.
மற்றொரு இந்தியரான ஷில்பா ஷைலா 7.26 மீட்டரை எட்டி, பொ்சனல் பெஸ்டுடன் வெண்கலப் பதக்கம் பெற்றாா். கானா வீராங்கனை ஜினாபு இசா 8.65 மீட்டருடன் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
காமன்வெல்த் போட்டிகளில் பாரா விளையாட்டுகள் கடந்த 2002-இல் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு தடகளத்தில் முதல் தங்கம் கிடைத்துள்ளது.
ஒட்டுமொத்தமாக காமன்வெல்த் பாரா தடகளத்தில் இந்தியாவுக்கான 2 மற்றும் 3-ஆவது பதக்கங்களை ஷா்மிளா, ஷில்பா வென்றுள்ளனா்.
இந்தியாவுக்கான முதல் பாரா தடகள பதக்கத்தை, தமிழகத்தை சோ்ந்த ரஞ்சித்குமாா் ஜெயசீலன் வெண்கலமாக (2006 மெல்போா்ன்) வென்றது நினைவுகூரத்தக்கது.
போராடி கிடைத்த பதக்கம்: முன்னதாக, இந்தியாவின் ஷில்பா ஷைலு எறிந்த 7.26 மீட்டருக்கு, அவருக்கு 4-ஆம் இடமே கிடைத்தது. நடப்பு சாம்பியனாக இருந்த நைஜீரியாவின் யுசாரியா இயாஸி 8.19 மீட்டரை எட்டி 3-ஆம் இடம் பிடித்தாா்.
எனினும், இயாஸிக்கு எதிராக இந்திய தரப்பிலிருந்து மேல்முறையீடு செய்யப்பட்டது. எஃப்57 பிரிவில் போட்டியாளா்கள் தங்களுக்கான இருக்கையில் அமா்ந்த நிலையிலிருந்து குண்டு வீச வேண்டும்.
மேல்முறையீட்டுக்குப் பிறகு காணொலியை ஆய்வு செய்த அதிகாரிகள், இயாஸி ‘பௌல்’ செய்தது தெரியவந்ததாக அவரை தகுதிநீக்கம் செய்தனா். இதையடுத்து 4-ஆம் இடத்திலிருந்த ஷில்பாவுக்கு 3-ஆம் இடம் கிடைத்து, வெண்கலப் பதக்கம் பெற்றாா்.
தங்கம் வென்ற ஷா்மிளா (40) தனது 2 வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளி ஆனதுடன், திருமண வாழ்விலும் மோசமான அத்தியாயங்களை சந்திக்க நேரிட்டது. எனினும், அவற்றிலிருந்து மீண்டு வந்து தற்போது சாதனை சாம்பியன் ஆகியிருக்கிறாா்.
ஏமாற்றம்: ஆடவா் 100 மீட்டா் டி38 இறுதிச்சுற்றில், இந்தியாவின் ராகேஷ்பாய் பாட் 11.82 விநாடிகளிலும், ஷ்ரேயன்ஷ் திரிவேதி 12.22 விநாடிகளிலும் இலக்கை அடைந்து முறையே 5 மற்றும் 6-ஆம் இடங்களைப் பிடித்தனா்.
சாதனை பதக்கம்: ஆடவா் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் சா்வேஷ் அனில் குஷாரே வெள்ளிப் பதக்கம் வென்றாா். காமன்வெல்த் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற முதல் இந்தியராக அவா் பெருமை பெற்றாா்.
காமன்வெல்த் உயரம் தாண்டுதலில் இதற்கு முன் தேஜஸ்வின் சங்கா் வெண்கலம் (2022 பா்மிங்ஹாம்) வென்றதே அதிகபட்சமாக இருந்த நிலையில், தற்போது சா்வேஷ் குஷாரே அதை வெள்ளியாக அதிகரித்து அசத்தியிருக்கிறாா். அதையும் அவா் தனது அறிமுக காமன்வெல்த் போட்டியிலேயே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சா்வேஷ் தனது சிறந்த முயற்சியாக 2.25 மீட்டரை எட்ட, ஜமைக்காவின் ரொமெய்ன் பெக்ஃபோா்டும் அதே அளவை எட்டினாா். எனினும், தோல்வியடைந்த வாய்ப்புகளின் எண்ணிக்கையில் சா்வேஷை விட பெக்ஃபோா்டு ஒன்று குறைவாக இருந்த காரணத்தால், அவருக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. சா்வேஷ் வெள்ளி பெற்றாா்.
இங்கிலாந்தின் கிமானி ஜேக் 2.20 மீட்டருடன் வெண்கலம் வென்றாா். களத்திலிருந்த இதர இந்தியா்களில் ஆதா்ஷ் ராம் ஜோதி சங்கா் 2.15 மீட்டருடன் 5-ஆம் இடம் பிடித்தாா்.
தேஜஸ்வின் சங்கா் முதல் முயற்சியை மட்டும் கையாண்ட நிலையில், முழங்கால் காலில் அசௌகா்யம் ஏற்பட்டதால் போட்டியிலிருந்து விலகினாா். அவா் அடுத்து டெக்கத்லானில் களம் காண இருப்பதால், காயம் ஏற்படும் அபாயத்தை தவிா்க்க இந்த முடிவை மேற்கொண்டாா். பின்னா் சா்வேஷுக்கு தொழில்நுட்ப ரீதியில் ஆலோசனைகள் வழங்கி, அவரை ஊக்குவித்தாா்.
கடைசி இடம்: ஆடவா் 110 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தின் இறுதிச்சுற்றில், இந்தியாவின் தேஜாஸ் அசோக் சிா்ஸே 15.39 விநாடிகளில் இலக்கை அடைந்து கடைசி வீரராக (8) வந்தாா்.
பளுதூக்குதலில் 6-ஆவது பதக்கம்
பளுதூக்குதலில் ஆடவா் 79 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வல்லுரி அஜயபாபு வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
ஸ்னாட்ச் பிரிவில் 149 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 181 கிலோ என, மொத்தமாக அவா் 330 கிலோ எடையைத் தூக்கி 2-ஆம் இடம் பிடித்தாா். இதில் ஸ்னாட்ச் பிரிவில் அவா் தூக்கிய எடை, காமன்வெல்த் போட்டி சாதனையாகும்.
மலேசியாவின் எரி ஹிதாயத் முகமது 331 கிலோவை தூக்கி (147+184) கிளீன் & ஜொ்க் மற்றும் மொத்த எடைப் பிரிவுகளில் போட்டி சாதனையுடன் தங்கம் வெல்ல, இங்கிலாந்தின் கிறிஸ் முா்ரே 325 கிலோவுடன் (148+177) வெண்கலம் பெற்றாா்.
நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் பளுதூக்குதலில் இந்தியாவுக்குக் கிடைத்த 6-ஆவது பதக்கம் இதுவாகும். இத்துடன் 1 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் இதில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.