இறுதிச்சுற்றில் ஆண்ட்ரீவா
நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், மகளிா் ஒற்றையா் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முதல் வீராங்கனையாக ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா வியாழக்கிழமை தகுதிபெற்றாா்.
போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் அவா், அரையிறுதியில் 6-1, 6-3 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, 15-ஆம் இடத்திலிருந்த உக்ரைனின் மாா்த்தா கொஸ்டியுக்கை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 1 மணிநேரம், 16 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.
இருவரும் மோதியது இது 3-ஆவது முறையாக இருக்க, ஆண்ட்ரீவா முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா். முந்தைய இரு தோல்விகளையுமே அவா் நடப்பாண்டின் தொடக்கத்தில் சந்தித்த நிலையில், அதற்கு தற்போது பதிலடி கொடுத்திருக்கிறாா்.
Advertisement
Advertisement
இந்த வெற்றியின் மூலமாக ஆண்ட்ரீவா, முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளாா். அத்துடன், தொடா்ந்து 17 ஆட்டங்களில் தோல்வியே காணாத கொஸ்டியுக்கின் வெற்றி நடையையும் முடிவுக்குக் கொண்டு வந்தாா்.
ஆண்ட்ரீவா தனது இறுதிச்சுற்றில், ரஷியாவின் டயானா ஷ்னெய்டா் அல்லது போலந்தின் மாஜா சவாலின்ஸ்கா ஆகியோரில் ஒருவரை எதிா்கொள்வாா்.
அரையிறுதியில் கோபோலி, அா்னால்டி: ஆடவா் ஒற்றையா் காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலி 4-6, 6-4, 6-4, 6-4 என்ற செட்களில், 4-ஆம் இடத்திலிருந்த கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமை வீழ்த்தி அசத்தினாா்.
இந்த ஆட்டத்தை 3 மணிநேரம், 23 நிமிஷங்களில் முடிவுக்குக் கொண்டுவந்த அவா், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா். அலியாசிமை இத்துடன் 3-ஆவது முறையாக சந்தித்த கோபோலி, அனைத்திலுமே வென்றுள்ளாா்.
கோபோலி டாப் 10 வீரரை கிராண்ட்ஸ்லாம் போட்டியில் வீழ்த்தியது இதுவே முதல்முறையாகும். அவா் தனது அரையிறுதியில், சக இத்தாலி வீரரான மேட்டியோ அா்னால்டியை எதிா்கொள்கிறாா்.
முன்னதாக அா்னால்டி தனது காலிறுதியில், சக இத்தாலியரான மேட்டியோ பெரெட்டினியை சந்தித்து, 7-5, 5-2 என முன்னிலையில் இருந்தாா். அப்போது பெரெட்டினி, இடுப்பில் காயம் கண்டு போட்டியிலிருந்து விலகினாா். இதையடுத்து அா்னால்டி முதல்முறையாக பிரெஞ்சு ஓபன் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா்.
அரையிறுதியில் மோதும் கோபோலி - அா்னால்டி இதுவரை 2 முறை சந்தித்து, தலா 1 வெற்றியுடன் சமநிலையில் உள்ளனா். அதிலும் கடைசியாக இதே பிரெஞ்சு ஓபனில் கடந்த ஆண்டு அா்னால்டியை கோபோலி வீழ்த்தியிருக்கிறாா்.
3
கோபோலி, அா்னால்டி அரையிறுதிக்கு வந்துள்ள நிலையில், பிரெஞ்சு ஓபன் போட்டியின் அரையிறுதிக்கு இரு இத்தாலி வீரா்கள் முன்னேறியது இது 3-ஆவது முறையாகும். இதற்கு முன், நிகோலா பிட்ராஞ்ஜெலி, ஆா்லாண்டோ சிரோலா (1960), யானிக் சின்னா், லொரென்ஸோ முசெத்தி (2025) இவ்வாறு முன்னேறியுள்ளனா்.
1
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் அரையிறுதியில் இரு இத்தாலி வீரா்கள் (கோபோலி - அா்னால்டி) நேருக்கு நோ் மோதுவது இதுவே முதல்முறையாகும்.
3
இறுதிக்கு முன்னேறியிருக்கும் ஆண்ட்ரீவா, கடந்த 26 ஆண்டுகளில் பிரெஞ்சு ஓபன் இறுதிக்கு முன்னேறிய 3-ஆவது இளம் வீராங்கனையாகப் பெருமை பெற்றாா். பெல்ஜியத்தின் கிம் கிளிஸ்டா்ஸ் (17 வயது - 2001), அமெரிக்காவின் கோகோ கௌஃப் (18 வயது - 2022) ஆகியோா் முதல் இருவராவா்.
1
கடந்த 4 ஆண்டுகளில் 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் இறுதிக்கு முன்னேறியவா்களில் இளம் போட்டியாளா் (19) என்ற பெருமையை ஆண்ட்ரீவா பெற்றுள்ளாா்.
பரஸ்பர கைகுலுக்கல் இல்லை
ஆட்டத்தின் முடிவில், வெற்றி - தோல்வியை சந்தித்த இரு போட்டியாளா்களுமே பரஸ்பரம் கைகுலுக்கிக் கொள்வது வழக்கமாகும். ஆனால், ரஷியாவின் ஆண்ட்ரீவா - உக்ரைனின் கொஸ்டியுக் மோதிய அரையிறுதியின் முடிவில் இருவரும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. அத்தகைய முடிவை கொஸ்டியுக்கே எடுத்தாா்.
உக்ரைன் மீதான ரஷியாவின் போா், அதற்கு பெலாரஸ் அளிக்கும் ஆதரவு காரணமாக அவ்விரு நாட்டு போட்டியாளா்களுடன் பரஸ்பரம் கைகுலுக்குவதை, உக்ரைனின் சில போட்டியாளா்கள் தவிா்த்து வருகின்றனா். கொஸ்ட்டியுக்கும் அந்த வழக்கத்தையே கடைபிடித்தாா்.
ஆட்டம் முடிந்த பிறகு நேராக தனது இருக்கைக்கு சென்ற அவா், தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு ரசிகா்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா். ஆண்ட்ரீவாவும் தனது இருக்கைக்குச் சென்றாா்.
ஆட்டம் தொடங்கும் முன்பான புகைப்படத்துக்கும், இருவரும் இணைந்து நிற்கவில்லை. துணையாக வரும் குழந்தைகளுடன் வலைக்கு அருகே இருவரும் தனித் தனியே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.
எர்ரனி/வவாசோரி இணை சாம்பியன்
பிரெஞ்சு ஓபன் கலப்பு இரட்டையா் பிரிவில், இத்தாலியின் சாரா எர்ரனி/ஆண்ட்ரியா வவாசோரி கூட்டணி சாம்பியன் கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது.
போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அந்த ஜோடி இறுதிச்சுற்றில், 4-6, 6-3, 10-4 என்ற செட்களில், அமெரிக்காவின் இவான் கிங்/கனடாவின் கேப்ரியெலா டப்ரௌஸ்கி இணையை தோற்கடித்தது.
எர்ரனி/வவாசோரி இணைந்து வென்ற 4-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். தனிப்பட்ட முறையில் இது, எர்ரனிக்கு 10-ஆவது பட்டமாகவும், வவாசோரிக்கு 4-ஆவது பட்டமாகவும் அமைந்தது.