உலக செஸ் தொடர்களில் பங்கேற்க ரஷியாவிற்கு 3 ஆண்டுகள் தடை! என்ன காரணம்?
செஸ் தொடர்களில் பங்கேற்க ரஷியாவிற்கு விதிக்கப்பட்ட தடை பற்றி...
சர்வதேச செஸ் கூட்டமைப்பான ஃபிடே, செஸ் தொடர்களில் பங்கேற்க ரஷியாவிற்கு 3 ஆண்டுகளுக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
உக்ரைன் - ரஷியா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் பகுதிகளில் செஸ் தொடர்களை ரஷியா நடத்தி வந்தது.
உக்ரைனின் கிரீமியா, டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், சபோரிஷியா, கெர்சன் ஆகிய பகுதிகளை ரஷியா ஆக்கிரமித்துள்ளது. அந்தப் பகுதிகளில் தொடர்ந்து முக்கிய செஸ் போட்டிகளை ரஷியா நடத்தியது சர்ச்சைக்குள்ளானது.
Advertisement
Advertisement
ஆக்கிரமிப்பு பகுதிகளில் பிராந்திய நாடுகளை திரட்டி செஸ் தொடர் நடத்தி, ஃபிடே விதிகளை ரஷியா மீறுவதாக 2023-ல் உக்ரைன் செஸ் கூட்டமைப்பு புகார் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், உக்ரைன் ஆக்கிரமிப்பு பகுதிகளில் நடத்தத் திட்டமிட்ட அனைத்து செஸ் போட்டிகளையும் நிறுத்துமாறு ரஷியாவிற்கு 90 நாள்கள் கெடு விதித்து உலக விளையாட்டு நடுவர் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது. ஜூன் 9 உடன் கெடு முடிந்த நிலையில் ரஷியா அந்த உத்தரவை மீறி செயல்பட்டதால் 3 ஆண்டுகள் செஸ் தொடர்களில் பங்கேற்க ரஷிய செஸ் கூட்டமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உலகளவில் ஃபிடே நடத்தும் செஸ் தொடர்கள் எதிலும் ரஷியா பங்கேற்க முடியாது. ஆனால், ரஷியாவை பிரதிநிதித்துவப்படுத்தாமல் தனிப்பட்ட முறையில் ரஷிய வீரர்கள் போட்டிகளில் பங்கேற்க முடியும்.
ஃபிடே அமைப்பு முதலில் 2 ஆண்டு தடை விதித்து உத்தரவிட்ட நிலையில், மேல்முறையீட்டில் 45,000 யூரோ அபராதமாக தண்டனை குறைக்கப்பட்டது. ஆனால், அந்த உத்தரவு உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாட்டை குலைக்கும் விதத்தில் இருந்ததைத் தொடர்ந்து அந்த அபராதம் ரத்து செய்யப்பட்டு 3 ஆண்டுகள் தடை விதிக்க உத்தரவிட்டது.
ரஷியாவின் முன்னாள் துணைப் பிரதமர் அக்ராடி துவோர்கோவிச் ஃபிடேயின் தலைவராக இருந்தார். மேற்கத்திய நாடுகளில் தடை செய்யப்பட்ட நபர்களுடன் அவர் தனிப்பட்ட முறையிலும், தொழில்ரீதியாகவும் தொடர்பில் இருப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து மே மாதம் அப்பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.