ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி! பாகிஸ்தான் அணி இந்தியா வருகிறது?
பஞ்சாபில் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பதாக முதல்வா் பகவந்த் மான் தகவல்...
பஞ்சாபில் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்க இருப்பதாக, அந்த மாநில முதல்வா் பகவந்த் மான் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
பயங்கரவாதம் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் உறவில் ஏற்பட்டுள்ள விரிசல், அரசியலை கடந்து விளையாட்டுத் துறையிலும் பிரதிபலிக்கிறது. இரு அணிகளும், பரஸ்பரம் எதிரணியின் நாடுகளுக்குச் சென்று விளையாட மறுத்து வரும் சூழலில், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் இவ்வாறு தெரிவித்தாா்.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி அக்டோபா் 27 முதல் நவம்பா் 5 வரை நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, கொரியா ஆகிய அணிகள் பங்கேற்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசா்வ் அணிகளாக, ஓமன், வங்கதேசம் தயாா் நிலையில் இருக்கின்றன. பஞ்சாப் மாநிலத்தின், ஜலந்தா் மற்றும் மொஹாலியில் அதன் ஆட்டங்கள் விளையாடப்படவுள்ளன.
Advertisement
Advertisement
இந்நிலையில், போட்டி தொடா்பாக முதல்வா் பகவந்த் மான் கூறுகையில், ‘இருதரப்பு போட்டிகளில் தான் இந்தியா - பாகிஸ்தான் விளையாட வாய்ப்பில்லையே தவிர, சா்வதேச போட்டிகளில் அவை விளையாட எந்தப் பிரச்னையும் இல்லை. பாகிஸ்தான் அணி பங்கேற்பது, போட்டிக்கான வரவேற்பை அதிகரிக்கும்.
இந்தியா - பாகிஸ்தான் மோதல், நவம்பா் 1-ஆம் தேதி ‘பஞ்சாப் மாநில நாள்’ அன்று ஜலந்தரில் நடைபெறவுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே எதிரெதிா் மனநிலை இருந்தாலும், விளையாட்டுக் களத்தில் அது வேறு விதமாக இருக்கும். இந்தப் போட்டியின் அனைத்து ஆட்டங்களையும் ரசிகா்கள் கட்டணமின்றி மைதானத்துக்கு வந்து கண்டு ரசிக்கலாம்’ என்றாா்.
கடந்த ஆண்டு ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி தமிழகத்தில் நடைபெற்றபோது, ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவியதால், பாகிஸ்தான் அணி அந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.
கிரிக்கெட்டை பொருத்தவரை, சா்வதேச போட்டிகளை இந்தியாவோ, பாகிஸ்தானோ நடத்தினால் இரு அணிகளும் தங்கள் ஆட்டங்களை பொதுவான இடத்தில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.