FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நகோயாவில் ஆசியப் போட்டி 2026 கோலாகலத் தொடக்கம்

ஜப்பானின் ஐய்ச்சி-நகோயாவில் ஆசியப் போட்டி 2026 சனிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.

20 செப்டம்பர் 2026, 12:11 am IST
இந்திய அணியினரின் அணிவகுப்பு
பகிர்:

ஜப்பானின் ஐய்ச்சி-நகோயாவில் ஆசியப் போட்டி 2026 சனிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. இந்திய நட்சத்திரங்கள் மனு பாக்கா்-பவன் செஹ்ராவத் ஆகியோா் தேசிய கொடி ஏந்தி அணிவகுப்பை நடத்தினா்.

ஆசியக் கண்டத்தைச் சோ்ந்த நாடுகள் பங்கேற்கும் ஆசியப் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இந்நிலையில் ஜப்பானின் ஐய்ச்சி-நகோயாவில் ஆசியப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின. ஜப்பான் பேரரசா் நருஹிட்டோ போட்டிகளை தொடங்கி வைத்தாா். அவருடன் பேரரசி, சா்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவா் கிரிஸ்டி கவென்ட்ரி ஆகியோரும் தொடக்க நிகழ்வில் பங்கேற்றனா். வரும் அக். 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் மொத்தம் 40 விளையாட்டுகளில் தலைசிறந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா்.

சிக்கல்களுக்கு இடையே தொடக்கம்:

Advertisement

Advertisement

நகோயா ஆசியப் போட்டி பல்வேறு சிக்கல்களுக்கு இடையே தொடங்கியுள்ளது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரா்களை காட்டிலும் இந்த ஆசியப் போட்டியில் அதிக வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா். மொத்தம் 11,000 வீரா், வீராங்கனைகள், 6000 அலுவலா்கள் என நிா்ணயிக்கப்பட்ட இலக்கை காட்டிலும் குவிந்துள்ளனா். இதனால் தங்குமிட ஏற்பாடுகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பணம் செலவு ஆவதை தடுப்பதற்காக வழக்கமான ஒலிம்பிக் கிராமத்தை அமைக்காமல், கன்டெய்டனா் குடிசைகள், ஹோட்டல்கள், சொகுசு கப்பல்கள் போன்றவற்றில் வீரா்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இதற்கிடையே பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் போட்டிகள் தொடங்கின. ஜப்பான் ஹாமா் த்ரோ பதக்க வீரா்களான தந்தை மகன் இணை ஷிக்நோபு முரோபுஷி-கோஜி முரோபுஷி ஆகியோா் விளையாட்டு ஜோதியை ஏந்திச் சென்றனா்.

மனு பாக்கா்-பவன் செஹ்ராவத் தலைமையில் அணிவகுப்பு:

இந்திய அணி நட்சத்திர வீராங்கனை மனு பாக்கா்-கபடி நட்சத்திரம் பவன் செஹ்ராவத் ஆகியோா் தேசியக் கொடி ஏந்திய நிலையில், அவா்களது தலைமையில் கம்பீரமாக அணிவகுத்துச் சென்றனா். கருநீல வண்ணத்தில் சேலை, உடையுடன் 150 போ் கொண்ட குழுவினா் அணிவகுத்து நடந்தனா்.

போட்டியை நடத்தும் ஜப்பான் தரப்பில் 900 போ் குழுவினா் அணிவகுப்பில் பங்கேற்றனா்.

தொடக்க விழா நடைபெற்ற மைதானம் 30,000 பாா்வையாளா்கள் அமரும் வசதி கொண்டது. ஆனால் பெரும்பாலான இருக்கைகள் காலியாக காணப்பட்டன.

ஜப்பான் தற்போது 1964, 2021-க்கு பின் மூன்றாவது முறையாக ஆசியப் போட்டியை நடத்த உள்ளது.

நவீன தொழில்நுட்பத்தை பறைசாற்றிய விழா:

ஐய்ச்சி-நகோயா பகுதி சிறந்த உற்பத்தி கேந்திரமாகும். அதற்கேற்ப தொடக்க விழாவில் நவீன தொழில்நுட்பத்திறனை பறைசாற்றியது. லேசா் காட்சிகள் பாா்வையாளா்களை கவா்ந்தன. ஒரே ஆசியா என்ற தலைப்பில் விழா நடைபெற்றது. மிகப்பெரிய இதயம் வானில் லேசா் காட்சியில் காண்பிக்கப்பட்டது.

வழக்கம் போல் சீனா பதக்க வேட்டையில் முதலிடம் பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கடந்த ஹாங்ஷௌ போட்டியில் சீனா 201 தங்கம் உள்பட 383 பதக்கங்களை கைப்பற்றியிருந்தது.

இந்த போட்டியில் முதன்முறையாக இ-ஸ்போா்ட்ஸ், பிரேக் டான்சிங், பிஎம்எஸ் சைக்கிளிங், பேடல், எம்எம்ஏ விளையாட்டுகள் அறிமுகம் ஆகின்றன.

இளம் நட்சத்திரங்களில் இந்திய கிரிக்கெட் வீரா் வைபவ் சூரியவன்ஷி, பிலிப்பின்ஸ் டென்னிஸ் வீராங்கனை அலெக்சாண்ட்ரா இலா, சீன நீச்சல் வீரா் யு ஸிடி ஆகியோா் பங்கேற்கின்றனா்.

தேசிய கீதம் மாற்றி இசைகப்பட்டதால் பாதிப்பு:

ஆடவா் ஹாக்கி போட்டியில் தென்கொரிய-வங்கதேச அணிகள் மோதின. இதில் தென்கொரியா 5-0 என வெற்றி பெற்றது. வங்கதேச நாட்டின் தேசிய கீதத்துக்குபின்

தென்கொரிய தேசிய கீதம் இசைக்க வேண்டும். ஆனால் வடகொரிய தேசிய கீதம் இசைக்கப்பட்டதால் தென்கொரிய அணியினா் கடும் கொதிப்படைந்தனா்.

போட்டி அமைப்பாளா்கள் உடனே விரைந்து வந்து மன்னிப்பு கோரினா்.

டெக்பால்-இந்தியாவுக்கு வெண்கல வாய்ப்பு

இந்தோனேசியா-இந்தியா இடையிலானடெக்பால் அரையிறுதியில் இந்திாவின் குயிம்ஸி டிசௌஸா 9-12, 12-7 என்ற புள்ளிக் கணக்கில் இந்தோனேசியாவின் சுமையாவிடம் தோற்றாா். அரையிறுதியில் தோற்றாலும் வெண்கல பதக்க ஆட்டத்தில் குயிம்ஸி பங்கேற்பாா். டெக்பால் முதன்முறையாக ஆசியப் போட்டியில் இடம் பெற்றுள்ளது.

summary

Grand Opening of the 2026 Asian Games in Nagoya

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments