FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

விருகம்பாக்கம் பிரியாணி கடைக்கு நேரில் சென்று உரிமையாளருக்கு ஆறுதல் கூறிய ஸ்டாலின் 

சென்னை விருகம்பாக்கத்தில் ஓசி பிரியாணி கேட்டு திமுகவினரால் கடை ஊழியர்கள் தாக்குதலுக்குள்ளான உணவகத்திற்கு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வியாழனன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 1:24 pm IST
பகிர்:

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் ஓசி பிரியாணி கேட்டு திமுகவினரால் கடை ஊழியர்கள் தாக்குதலுக்குள்ளான உணவகத்திற்கு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வியாழனன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள உணவகத்தின் காசாளர் பிரகாஷ் (37), கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கடையின் வேலை நேரம் முடிவடைந்த பின்னர், வரவு செலவு கணக்கு பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு காரில் வந்த ஒரு கும்பல், பிரகாஷிடம் இலவசமாக பிரியாணி கேட்டது. அப்போது பிரகாஷ், பிரியாணி காலியாகிவிட்டதாக தெரிவித்துள்ளார். உடனே அந்தக் கும்பல், பிரகாஷிடம் தகராறு செய்தது. தகராறு முற்றவே அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பிரகாஷை தாக்கினர். இதைத் தடுக்க வந்த அந்தக் கடை ஊழியர்கள் கருணாநிதி, நாகராஜ் உள்பட 3 பேரை, அவர்கள் கடுமையாக தாக்கினர். இதில் காயமடைந்த பிரகாஷ், கருணாநிதி, நாகராஜ் உள்பட 4 ஊழியர்கள், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக அந்த பிரியாணி கடை நிர்வாகம் சார்பில், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்து வந்தனர். 

இந்த நிலையில், அந்த உணவகத்தில் பிரியாணி கேட்டு அந்தக் கும்பல் தாக்குதல் நடத்திய காட்சி சமூக ஊடகங்களில் புதன்கிழமை வெளியானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த உணவக நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீஸார், 10 பேர் மீது 6 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டது விருகம்பாக்கம் பகுதி திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் யுவராஜ், திவாகர் தலைமையிலான கும்பல் எனத் தெரியவந்தது. இந்தக் கும்பல் ஏற்கெனவே, பிரியாணி கேட்டு அந்தக் கடையில் தகராறு செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், தலைமறைவாக இருக்கும் அந்தக் கும்பலை தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

இச்சம்பவத்தை அடுத்து திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருகம்பாக்கம் வடக்கு பகுதியைச் சேர்ந்த யுவராஜ், திவாகர் ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார்கள்' என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் ஓசி பிரியாணி கேட்டு திமுகவினரால் கடை ஊழியர்கள் தாக்குதலுக்குளான உணவகத்திற்கு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வியாழனன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

இதுதொடர்பாக உணவக உரிமையாளர் தமிழ்செல்வன் கூறியதாவது;

எங்கள் உணவக ஊழியர்களைத் தாக்கி தகராறு செய்தவர்கள் திமுகவினர் என்ற தகவல் வெளியானவுடன், வியாழன்  காலை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எங்களை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு காயம்பட்ட ஊழியர்களுடன் வரவழைத்தார். அங்கு எங்களை நல்ல முறையில் உபசரித்தவர், ஊழியர்களிடமும் நலம் விசாரித்தார். தாக்குதல் குறித்து முழுமையாக கேட்டறிந்தார். உரிய உதவிகள் செய்வதாக உறுதியளித்தார். பின்னர் எங்களுடன் நேரில் வந்து உணவகத்தினைப் பார்வையிடுவதாக விருப்பம் தெரிவித்தார்.

பின்னர் எங்களுடன் வந்து உணவகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்து விட்டு, மீண்டும் தேவையான உதவிகளை செய்வதாக வாக்களித்து விட்டுச் சென்றார். இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments