FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

எங்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை: பொன் மாணிக்கவேல் மீது போலீஸார் புகார்

பொன்மாணிக்கவேல் எங்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் புகார் தெரிவித்தனர்.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:


பொன்மாணிக்கவேல் எங்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் புகார் தெரிவித்தனர்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி ஏ.ஜி. பொன்மாணிக்கவேல் மீது அப் பிரிவு ஏடிஎஸ்பி, டி.எஸ்.பி. உள்பட 13 பேர் தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி தே.க.ராஜேந்திரனை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர். 
அதில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல், சிலை கடத்தல் சம்பவங்களில் உரிய ஆவணங்கள், சாட்சிகள் இல்லாமல் சட்டத்துக்கு முரணாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்ய வற்புறுத்தினார் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீது தக்க நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும் என்று டிஜிபி அலுவலகம் தெரிவித்தது.
இந்நிலையில் டிஜிபி அலுவலகத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவைச் சேர்ந்த மேலும் 7 அதிகாரிகள் பொன்மாணிக்கவேல் மீது புதன்கிழமை புகார் அளித்தனர். பின்னர், அப் பிரிவு ஏடிஎஸ்பி இளங்கோ, டிஎஸ்பி குமார், ஆய்வாளர் ஆண்டனி செல்லத்துரை ஆகியோர் அளித்த பேட்டி:
எங்களை பொன்மாணிக்கவேல் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை. அவர் அளிக்கும் வேலைகளை மட்டுமே செய்ய அனுமதித்தார். ஆஸ்திரேலியாவில் ஒரு அருங்காட்சியகத்தில் 100 சிலைகள் இருப்பதாக தகவல் கிடைத்தது. ஆனால் அந்த தகவலை பொன்மாணிக்கவேல் பெரிதுபடுத்தாமல், இங்குள்ள சிலரை கைது செய்வதிலேயே ஆர்வம் காட்டினார். சரியான ஆவணங்களும், தடயங்களும் இல்லாமல் சிலரை கைது செய்ய அவரால் நிர்பந்திக்கப்பட்டோம்.
வழக்குகளில் குற்றவாளிகளை பொன்மாணிக்கவேல் நிர்ணயித்துவிட்டு, அவர்களை கைது செய்யவும், சிறையில் அடைக்கவும், நீதிமன்ற விசாரணைக்கு செல்லவும் மட்டுமே எங்களை பயன்படுத்தினார் என்றனர்.


ஆவணங்கள் இல்லாமல் தலையிட முடியாது
 சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு காணொலிக் காட்சி மூலம் சிலை கடத்தல் தொடர்பான வழக்கை விசாரித்து வந்தனர். அப்போது ஆஜரான வழக்குரைஞர் யானை ராஜேந்திரன், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேலுக்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் தமிழக காவல் துறை டிஜிபியிடம் புகார் அளித்து வருவதை நீதிபதிகள் கவனத்துக்குக் கொண்டு வந்தார். 
இந்த விவகாரம் தொடர்பாக ஆவண ஆதாரங்களைத் தாக்கல் செய்யாமல், வாய்மொழி வாக்குமூலத்தின் அடிப்படையில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்த நீதிபதிகள், ஆதாரங்களை தாக்கல் செய்தால் நீதிமன்றம் அதனை ஆய்வு செய்யும் எனத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் நீதிபதிகளிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments