FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

என் மீது புகார் தெரிவித்தவர்கள் ஒரு வழக்குகூட பதிவு செய்ததில்லை

என் மீது புகார் தெரிவித்தவர்கள் ஒரு வழக்குக் கூட பதிவு செய்தது கிடையாது என தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:


என் மீது புகார் தெரிவித்தவர்கள் ஒரு வழக்குக் கூட பதிவு செய்தது கிடையாது என தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.
தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக ஏ.ஜி. பொன் மாணிக்கவேல் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் பணி செய்து வந்தார்.
இந்நிலையில் பொன்மாணிக்கவேல், கடந்த நவம்பர் 30-ஆம் தேதி ஓய்வு பெற்றார். ஆனால் பொன்மாணிக்கவேல் பணிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக அவரை நியமனம் செய்து உத்தரவிட்டது. 
பொன்மாணிக்கவேல் மீது புகார்: இந்நிலையில் அயல் பணி மூலம் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணிபுரியும் ஏடிஎஸ்பி இளங்கோவன், டிஎஸ்பி பழனிகுமார் ஆகியோர் தலைமையில் 2 காவல் ஆய்வாளர்கள், 6 உதவி காவல் ஆய்வாளர்கள் உள்பட 13 பேர் தமிழக சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி தே.க.ராஜேந்திரனை செவ்வாய்க்கிழமை சந்தித்து, தங்களை பொன்மாணிக்கவேல் சட்டத்துக்கு முரணாக வழக்குப் பதிவு செய்யக் கோருவதாக புகார் மனு ஒன்றை அளித்தனர். இதேபோல அயல் பணி மூலம் பணிபுரியும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணிபுரியும் மேலும் 7 அதிகாரிகள், டிஜிபி அலுவலகத்தில் புதன்கிழமை பொன்மாணிக்கவேல் மீது புகார் மனு அளித்தனர். 
ஒரு வழக்குக் கூட பதியவில்லை: சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்மாணிக்கவேல் அளித்த பேட்டி:
என் மீது புகார் தெரிவித்தவர்கள் இதுவரை ஒரு வழக்குக் கூட பதிவு செய்தது கிடையாது. அயல்பணி மூலம் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் 400 நாள்கள் பணியில் இருந்த அவர்கள், ஒரு வழக்குகூட பதிவு செய்தது கிடையாது, ஒரு குற்றவாளியைக் கூட கைது செய்தது கிடையாது. 
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு அயல் பணி மூலம் 5 ஏடிஎஸ்பி-க்கள், 5 டி.எஸ்.பி.கள், 17 காவல் ஆய்வாளர்கள், 47 உதவி ஆய்வாளர்கள் உள்பட 208 பேர் வந்தனர். இவர்களை பயன்படுத்தி நாங்கள், ஒரு சிலையைக் கூட பிடித்தது கிடையாது. நாங்கள், அந்தந்த மாவட்ட எஸ்.பி. மூலம் வழங்கப்படும் ஆயுதப் படை காவலர்கள் மூலமே சிலைகளை கண்டு பிடித்தோம். நான் துப்பு துலக்கிய 19 வழக்குகளில் 17 சிலைகளை இந்த காவலர்களின் துணையோடே கண்டு பிடித்தோம். 47 குற்றவாளிகளையும் இப்படியே கைது செய்தோம். மேலும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறிய குழுவின் மூலமே விசாரணை செய்கிறோம்.
அலுவலக உதவிக்கு: அயல் பணி வந்தவர்களை, எங்களது அலுவலக உதவிக்கே பயன்படுத்தினோம். அயல் பணி மூலம் வந்த காவல் ஆய்வாளர்களோடு நான் நேரடியாகப் பேசியும், ஆய்வுக் கூட்டம் நடத்தியும் ஒரு ஆண்டுக்கு மேலாகிறது.
புகார் அளித்த யாரும் தங்களை, பணியில் இருந்து விடுவிக்கக் கோரி என்னிடம் மனு கொடுத்தது கிடையாது. உயர்நீதிமன்ற உத்தரவு இல்லாமல், நான் யாரையும் தனிப்பட்ட முறையில் பணியில் இருந்து விடுவிக்க முடியாது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் நான் யாரையும் செயல்பட விடாமல் தடுத்ததும் கிடையாது. அரசு ஊதியம் பெறும் அதிகாரிகள், தங்களது கடமையை முதலில் செய்யட்டும். 
வழக்குகளின் முக்கியத்துவம் கருதி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் உயர் அதிகாரிகள் மட்டுமே முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வது, குற்றவாளிகளை கைது செய்வது போன்ற பணிகளை செய்கிறோம் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments