பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
உலக அளவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
உலக அளவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
இதுதொடர்பாக, அந்த ஆய்வை மேற்கொண்ட லண்டனைச் சேர்ந்த தாம்ஸன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் தொடர்பாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 548 பேரிடம் கடந்த மார்ச் 26 ஆம் தேதி முதல் மே 4-ஆம் தேதி வரை ஆய்வு நடத்தப்பட்டது. இவர்கள் அனைவரும் பெண்கள் தொடர்பான பிரச்னைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் ஆவர்.
பாலியல் வன்முறைகள், துன்புறுத்தல்கள், பாலியல் சாராத குற்றங்கள், பெண்ணடிமைத்தனம், பெண்களுக்கு எதிரான கலாசார நடைமுறைகள், ஆள்கடத்தல் உள்ளிட்ட விஷயங்களை முன்வைத்து, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து, உள்நாட்டு போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான், சிரியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே மேற்கத்திய நாடு அமெரிக்கா என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டிலும் இதேபோன்ற ஆய்வை தாம்ஸன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை நடத்தியது. அதில், ஆப்கானிஸ்தான் முதலிடத்திலும், காங்கோ குடியரசு, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் இருந்தன. இந்தியா 4-ஆவது இடத்தில் இருந்தது.
இந்தியா நிராகரிப்பு: இதனிடையே, இந்த ஆய்வு முடிவுகளை தேசிய மகளிர் ஆணையம் நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக அந்த ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கூறுகையில், பெண்கள் பொது இடங்களில் பேசக் கூட அனுமதி இல்லாத நாடுகளைவிட குறைவான இடம் இந்தியாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மிக குறைவான பேரிடம்தான் அந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதனை, ஒட்டுமொத்த நாட்டின் நிலவரமாகக் கருத முடியாது' என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.