FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு சாதகமான தீர்ப்பு: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த உத்தரவு கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகே வெளியாகும். இதில் சட்டப்படி தமிழ்நாட்டுக்கே சாதகமானத் தீர்ப்பு கிடைக்கும் என்று 'துக்ளக்'

30 ஜனவரி 2024, 6:30 pm IST
இந்திய தொழில், வர்த்தக கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் புதன்கிழமை பங்கேற்க வந்த, 'துக்ளக்' ஆசிரியர் எஸ்.குருமூர்த்தியுடன் கைகுலுக்கும் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல்ஹாசன். 
பகிர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த உத்தரவு கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகே வெளியாகும். இதில் சட்டப்படி தமிழ்நாட்டுக்கே சாதகமானத் தீர்ப்பு கிடைக்கும் என்று 'துக்ளக்' ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி கூறினார்.
இந்திய தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு சார்பில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்த விவாத நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குருமூர்த்தி, பின்னர் நிருபர்களிடம் கூறியது:
தமிழகத்தில் தற்போது தலைமைக்கான வெற்றிடம் உள்ளது. இதை யாரும் மறுப்பதற்கில்லை. கட்சிகளுக்கான தலைவர்கள்தான் தற்போது உள்ளனரே தவிர மக்களுக்கான தலைமை இல்லை என்பதுதான் நிதர்சனம். எனவே, அந்த வெற்றிடத்தை நடிகர் ரஜினிகாந்த் பூர்த்தி செய்வார் என்று நான் கருதுகிறேன். காரணம் மோடியின் ஆட்சித் திறன், ரஜினிக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கு இவை இரண்டும் இணைந்தால் வெற்றி பெறலாம்.
தமிழகத்துக்கு சாதகமான தீர்ப்பு: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த உத்தரவு கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகே வெளியாகும். காரணம் சட்டப்படி தமிழ்நாட்டுக்கே சாதகமானத் தீர்ப்பு கிடைக்கும். இத்தகைய தீர்ப்பை தற்போது வழங்கினால் கர்நாடகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தள்ளி வைத்திருப்பது சரியே. மேலும் இவ்விவகாரத்தில் கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், அந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்பார்கள் என்பதால் தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோர் பிரதமரைச் சந்திக்க வாய்ப்பு கேட்டும் அளிக்கப்படவில்லை.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி அமைந்தால் அது பாஜகவுக்குத்தான் சாதகமாக அமையும். 
மேலும் மோடியை வீழ்த்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒன்று கூடினால் அது நடக்காது. அவர் செய்யாததை நாங்கள் செய்து காட்டுவோம் என்று கூறி கூட்டணி அமைத்தால் அந்தக் கூட்டணி வெற்றி பெறலாம் என்றார் குருமூர்த்தி.
வளர்ச்சிக்கான கொள்கைகள் தேவை: முன்னதாக விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியதாவது: நீண்டகால அடிப்படையில் நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நாடும், அதற்கான வளர்ச்சித் திட்டத்தை அவர்களாகக் கொண்டு வர வேண்டும். தொழில்துறையினர் தங்கள் சொந்த விருப்பு- வெறுப்புகளைக் களைந்து, ஆண்டுதோறும் ஒரு முறையாவது நாட்டின் வளர்ச்சி குறித்து திட்டமிட வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகளை வகுக்கும் முன்பு நாட்டின் கடைகோடியையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
கமல்ஹாசன்: விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசியது: நாட்டில் பன்முகத் தன்மை காக்கப்பட வேண்டுமானால் மத்தியில் கூட்டாட்சி அவசியம். அதே நேரத்தில் மாநிலத்தின் உரிமைகள் காக்கப்பட வேண்டும். மக்களின் வாழ்வாதாரப் பிரச்னையில் அரசியல் செய்யக் கூடாது. நாம் நமது உரிமைக்காக போராடித்தான் ஆக வேண்டும். தமிழகத்தில் மழைநீர் அளவு அதிகமாகத்தான் உள்ளது. அதை சேமிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தொழில்வளம் குன்றியுள்ளது. அதிலும் குறிப்பாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்தத் துறையை மேம்படுத்த அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்போதுதான் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றார் கமல்ஹாசன்.
நிகழ்ச்சியில் இந்திய தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்புத் தலைவர் ராகேஷ் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments