ஜூன் 3-வது வாரத்தில் பேரவை கூட்டத் தொடர்
தமிழக சட்டப் பேரவையை ஜூன் மூன்றாவது வாரத்தில் கூட்ட ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. வரும் ஜூன் 18-ஆம் தேதி பேரவை கூட்டத் தொடர் தொடங்க வாய்ப்புகள் இருப்பதாக பேரவைச்
தமிழக சட்டப் பேரவையை ஜூன் மூன்றாவது வாரத்தில் கூட்ட ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. வரும் ஜூன் 18-ஆம் தேதி பேரவை கூட்டத் தொடர் தொடங்க வாய்ப்புகள் இருப்பதாக பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை கடந்த மார்ச் 15-இல் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, நிதி நிலை அறிக்கை மீதான விவாதங்கள் மார்ச் 19-இல் தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன் பின், சட்டப் பேரவை மீண்டும் கூடும் நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
ஆய்வும்-கூட்டத் தொடரும்: அரசின் ஒவ்வொரு துறைக்கும் தேவையான நிதியைப் பெற பேரவையின் ஒப்புதலைப் பெற துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் பேரவையில் தாக்கல் செய்யப்படும். இதற்காக சட்டப் பேரவை சுமார் 30 நாள்கள் வரை நடைபெறும். இந்தக் கூட்டத் தொடரை ஜூன் மூன்றாவது வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டப் பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜூன் 18-ஆம் தேதி தொடங்கி சுமார் ஒரு மாதம் வரையில் கூட்டத் தொடர் நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டப் பேரவையில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகளை தாக்கல் செய்வதற்கு முன்பாக, அது தொடர்பான ஆய்வுக் கூட்டங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நடத்தி வருகிறார்.
பொதுப்பணித் துறையில் தொடங்கி தினந்தோறும் மூன்று முதல் நான்கு அரசுத் துறைகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டங்களை அவர் நடத்தி வருகிறார்.
இந்த ஆய்வுக் கூட்டங்களில் சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர், செயலாளர், ஆணையாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்த ஆய்வுக் கூட்டங்கள், மே மூன்றாவது வாரத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே மாத இறுதியில் அறிவிப்பு: இதைத் தொடர்ந்து, கொள்கை விளக்கக் குறிப்புகள் தயாரிப்பு, புதிய அறிவிப்புகளைத் தயார் செய்வது போன்ற பணிகள் நடைபெறவுள்ளன. சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே இறுதியில் வெளியாகக் கூடும் எனத் தெரிகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.