FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிராக பிஎஸ்என்எல் வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

தொலைபேசி கேபிள் பதிப்பதற்காக வாடகை கேட்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிராக பிஎஸ்என்எல் தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

தொலைபேசி கேபிள் பதிப்பதற்காக வாடகை கேட்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிராக பிஎஸ்என்எல் தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பிஎஸ்என்எல் ஈரோடு துணைப் பொது மேலாளர் தாக்கல் செய்த மனுவில், பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் தொலைபேசி மற்றும் இணையதள சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக ஓஎஃப்சி எனப்படும் ஆப்டிக்கல் பைஃபர் கேபிள்கள் பதிக்கப்படுகின்றன.
கடந்த 20 ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 730 கிலோமீட்டருக்கு கேபிள் பதிக்கப்பட்டுள்ளது. இதற்காக தோண்டப்படும் குழிகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மறுசீரமைப்பு கட்டணம் செலுத்தப்படுகிறது. இந்த நிலையில் ரிலையன்ஸ், பாரதி டெலிகாம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் எங்களைப் போன்று சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் கேபிள்களைப் பதித்துள்ளன. 
இந்த நிறுவனங்கள் கேபிள் பதித்ததற்காக வாடகை செலுத்த வேண்டும் என நில நிர்வாக ஆணையம் கடந்த 2001-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பெயர் இல்லை. இந்த அரசாணையின்படி பூமிக்கடியில் கேபிள் பதித்ததற்காக வாடகை தர வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகள் எங்களை நிர்பந்தம் செய்தன. இந்த நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு வாடகை கேட்க கூடாது என பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பினார். இருப்பினும் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் வாடகை கேட்டு நிர்பந்தம் செய்கின்றன. 
எனவே, எங்களிடம் இருந்து வாடகை கேட்கத் தடை விதிக்க வேண்டும். வாடகை வசூலிப்பது தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நகராட்சி நிர்வாக ஆணையர் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அனுப்பிய சுற்றறிக்கையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments