FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: 8 வாரங்களுக்குப் பிறகு இறுதி விசாரணை

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், பேரிடர் மேலாண்மை ஆகியவை தொடர்பான வழக்கு மீது 8 வாரங்களுக்குப் பிறகு இறுதி விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:


முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், பேரிடர் மேலாண்மை ஆகியவை தொடர்பான வழக்கு மீது 8 வாரங்களுக்குப் பிறகு இறுதி விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பேரிடர் மேலாண்மைத் திட்டத்தை அறிவிக்கக் கோரி கேரள மாநிலம், ஆலுவாவைச் சேர்ந்த ரசூல் ஜாய் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம். கான்வில்கர், டி.ஒய் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை அனுமதிக்கப்பட்ட மொத்த கொள்ளளவான 142 அடியை விட 2 அல்லது 3 அடி குறைவான நீர்மட்டத்தை (139.99 அடி ) ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக துணைக்குழு தலைவர் கூறியிருப்பதாக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ். நரசிம்மா தெரிவித்துள்ளார்.இதுபோன்ற சூழலில் முல்லைப் பெரியாறு அணையில் நடைமுறைக்கு ஏற்ற நீர்மட்டத்தை வைத்திருப்பதை துணைக்குழு உறுதி செய்ய வேண்டும். 
துணைக்குழுவுக்கு கேரளமும், தமிழகமும் ஒத்துழைக்க வேண்டும். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள எந்தவொரு பிரச்னையுடனும் தொடர்புடையதல்ல என்று சொல்லத் தேவையில்லை. இந்த மனு பேரிடர் காலத்தின் போது மனித உயிர்களை காப்பாற்றுவது தொடர்புடையது. இந்த வழக்கு செப்டம்பர் 6-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' எனத் தெரிவித்திருந்தனர்.
இதன்படி, இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம். கான்வில்கர், டி.ஒய் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ரசூல் ஜாய் சார்பில் வழக்குரைஞர் மனோஜ் வி ஜார்ஜ் ஆஜராகி, 120 ஆண்டுகள் பழைமையான முல்லைப் பெரியாறு அணையின் ஆயுள் குறித்து சர்வதேச அமைப்பைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். 
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால், அணைக்கு கீழ்ப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக உணரவில்லை. முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து 4 ஆண்டுகள் கடந்து விட்டன. 
மழை, வெள்ளம் காரணமாக கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி அதிகாலை முல்லைப் பெரியாறு அணை திடீரென திறக்கப்பட்டது. இது அணையை தமிழக அரசு எவ்வாறு நிர்வகித்து வருகிறது என்பதைக் காட்டுகிறது. வாழ்வதற்கான உரிமை பாதிக்கப்பட்டுள்ளது'என்றார்.
அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் சேகர் நாப்தே, ஜி. உமாபதி, முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த வழக்கு, கேரள அரசு ஆதரவுடன் தொடுக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை நீரை தேக்கி வைக்க உரிமை படைத்துள்ளோம். இருப்பினும் 142 அடி வரை மட்டுமே நீரை தேக்கி வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பேரிடர் மேலாண்மை குறித்த அக்கறை தமிழக அரசுக்கும் உள்ளது' என்றனர்.
அப்போது நீதிபதிகள், அணையின் பாதுகாப்பு குறித்து மனுதாரர் விடுத்துள்ள கோரிக்கைகள் குறித்து எவ்விதக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. அணையின் பாதுகாப்பு குறித்து கருத்துத் தெரிவிக்க நிபுணர்கள் இல்லை. எனவே, இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை 8 வாரங்களுக்குப் பிறகு நடைபெறும்' எனத் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments