திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலை பார்வையிட்டார் அமைச்சர் சேகர்பாபு
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் உள்ள சிவன் சன்னதியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு, சுவாமி தரிசனம் செய்தார்.
திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் உள்ள சிவன் சன்னதியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு, சுவாமி தரிசனம் செய்தார்.
திருக்குறுங்குடியில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான அழகிய நம்பிராயர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. 108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் சுவாமி அழகியநம்பிராயர் நின்றநம்பி, இருந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருப்பாற்கடல் நம்பி, திருமலைநம்பி ஆகிய 5 நிலைகளில் காட்சி அளிக்கிறார்.
சிவன் சன்னதி
Advertisement
Advertisement
இக்கோயில் வளாகத்தில் அழகியநம்பிராயர் சன்னதிக்கு வடபக்கத்தில் மகேந்திரநாதர் என்ற சிவன் சன்னதியும் அமைந்திருந்தது இக்கோயிலின் சிறப்பாகும். இந்நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு கோயில் நிர்வாகம் மகேந்திரநாதர் சன்னதியை கோயிலில் வேறு இடத்தில் வைப்பதற்காக அங்கிருந்து அப்புறப்படுத்தியது. இதனை எதிர்த்து சிவனடியார்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இறுதியாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த வழக்கில் அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பில் மகேந்திரநாதர் கோயிலை (சிவன் சன்னதி) முன்பிருந்தபடி அழகிய நம்பிராயர் சன்னதிக்கு வடபக்கத்தில் அமைத்து, பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமைச்சர் பார்வை
இந்நிலையில் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலுக்கு வருகை தந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்த அவர், கோயிலில் 2004ஆம் ஆண்டு அப்புறப்படுத்தப்பட்ட மகேந்திரநாதர் கோயில் (சிவன் சன்னதி) இருந்த இடத்தை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஞானதிரவியம், திமுக மாவட்டச் செயலாளர் இரா. ஆவுடையப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.