முகப்பு
தமிழ்நாடு

திருவையாறு ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனை!

திருவையாறு ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள் பாடினர்.

Updated On : 11 ஜனவரி 2023, 11:33 am IST
பகிர்:

தஞ்சாவூர்: திருவையாறு ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள் பாடினர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஆராதனை விழாவில் புதன்கிழமை நடைபெற்ற பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சியில் ஸ்ரீதியாகராஜருக்கு ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கீர்த்தனைகளை பாடி அஞ்சலி செலுத்தினர்.

இந்த விழாவை தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் ஜனவரி 6 ஆம் தேதி மாலை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நாள்தோறும் காலை 9 மணி முதல் இரவு 10.20 மணி வரை ஏராளமான இசைக் கலைஞர்கள் பாடியும், இசைத்தும் சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்நிலையில், நிறைவு நாளான புதன்கிழமை பஞ்சரத்ன கீர்த்தனை வைபவம் நடைபெற்றது. முன்னதாக, இந்த விழாவை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி புதன்கிழமை காலை 7.45 மணிக்கு தொடங்கி வைத்தார். 

பின்னர், காலை 8.30 மணி முதல் 9 மணி வரை நாகசுரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து காலை 9 மணியளவில் பிரபஞ்சம் எஸ். பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்சரத்ன கீர்த்தனை தொடங்கியது. இதில், தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக...' என்ற பாடல் பாடப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, கௌளை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ...' என்ற பாடலும், ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஸாதிஞ்சநெ ஓ மநஸா...' என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'கனகன ருசி ராக நகவஸந நிந்நு...' என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு...' ஆகிய பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.

இதில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஓ.எஸ். அருண், கடலூர் ஜனனி, அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜாராவ், திருவனந்தபுரம் பின்னி கிருஷ்ணகுமார் உள்பட ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீதியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது, ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments