என் ஆட்சியை மு.க. ஸ்டாலின் பார்ப்பார் : எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் பிரசாரம்!
மக்கள் நல்லாசியுடன் அமையும் என் ஆட்சியை மு.க. ஸ்டாலின் பார்ப்பார் என எடப்பாடி பழனிசாமி பேச்சு...
விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 20) கேட்டுக்கொண்டார்.
தன்னை தரக்குறைவாகப் பேசும் முதல்வர் மு.க. ஸ்டாலின், மக்கள் ஆட்சியை பார்ப்பார் எனவும் குறிப்பிட்டார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட செட்டிமாங்குறிச்சியில் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 20) பிரசாரத்தில் ஈடுபட்டார்.
Advertisement
Advertisement
பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
''கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர் யாராக இருந்தாலும் அதிமுகவின் உயர் பதவிக்கு வர முடியும். ஆனால், திமுகவில் அப்படி அல்ல. அது ஒரு குடும்பக் கட்சி. உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என துடிக்கிறார் ஸ்டாலின்.
சேலம் ஒரு வறட்சியான பகுதி. நான் முதல்வராக இருந்தபோது 100 ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டம் கொண்டுவரப்பட்டது. வறண்ட ஏரி, குளங்கள் இதன்மூலம் நிரப்பப்பட்டன.
ஆனால், நான் அடிக்கல் நாட்டிய ஏரிக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை. இதற்கு காரணம் திமுக. மக்களுக்கு தண்ணீர் தருவதில் என்ன அரசியல் தேவை இருக்கிறது. மேட்டூர் அணை நிரம்பி உபரி நீரை ஏரி, குளங்களில் நிரப்புவதை ஸ்டாலின் அரசியலாக்கி தடுக்கிறார்.
அதிமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து ஏரிகளும் நிரப்பப்படும். விடுபட்ட ஏரி, குளங்களிலும் நீர் நிரப்பப்படும். அதிமுக ஆட்சியில் விவசாயிகளின் பயிர்க் கடன்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டன.
விவசாயி என்றால் கேவலமாக நினைக்கும் எண்ணம்தான் ஸ்டாலினிடம் உள்ளது. இதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றாக இருந்து எனது ஆட்சியைப் பார்க்க வேண்டும்.
என்னைச் சாதாரணமாக எடைபோட்டார் ஸ்டாலின். இன்று முக்கிய எதிர்க்கட்சித் தலைவராக வளர்ந்துள்ளேன். உங்களால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது. மக்கள் பிரச்னைகளை அவைக்கு எடுத்துச்சென்றதால் திமுக திணறியது. அவையில் தொடர்ந்து இரண்டரை மணிநேரம் பேசினேன், மு.க. ஸ்டாலினால் பதில் அளிக்க முடியவில்லை.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் முழுவதும் ஒழிக்கப்படும்.
பெண்கள், குழந்தைகள், ஏன்? மூதாட்டிகளுக்கு கூட திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. குடும்ப ஆட்சிக்கு இந்த தேர்தலில் முடிவுகட்டுவோம். எடப்பாடி தொகுதி இம்முறை தேர்தலில் வரலாற்றுச் சாதனை படைக்க வேண்டும்'' என பழனிசாமி பேசினார்.
M.K. Stalin will witness my governance EPS campaigns in the Edappadi constituency
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.