FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா: தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்!

கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவில் திருநங்கைகள், திருநம்பிகள் மாங்கல்யம் கட்டிக் கொள்ளும் நிகழ்வு...

Updated On : 28 ஏப்ரல் 2026, 8:14 pm IST
கோயில் பூசாரியிடம் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள் - DNS
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் கிராமத்திலுள்ள அருள்மிகு கூத்தாண்டவர் சுவாமி திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவில் முக்கிய நிகழ்வாக திருநங்கைகள், திருநம்பிகள் மாங்கல்யம் கட்டிக் கொள்ளும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (ஏப். 28) மாலை நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.

இந்தியா மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் திருநங்கைகள், திருநம்பிகள் தங்களது குலதெய்வமாகக் கருதி, கூத்தாண்டவரை வழிபட்டு வருகின்றனர். இதற்காக ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் கூவாகம் கிராமத்திலுள்ள அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாவில் பெருந்திருவிழாவில் பங்கேற்று வழிபாடு செய்வர்.

அதன்படி, புகழ்பெற்ற இக்கோயிலின் நிகழாண்டு சித்திரைப் பெருந்திருவிழா ஏப்ரல் 14-ஆம் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 15 -ஆம் தேதி பந்தலடி தெய்வநாயகம் தோப்பில் பாரதம் தொடங்கியது. இதையடுத்து சந்தனுசரிதம், பீஷ்மர், தர்மர், பாஞ்சாலி பிறப்பு நிகழ்வுகள், பகாசூரன்வதம், பாஞ்சாலி திருமணம், கூத்தாண்டவர் பிறப்பு, ராஜாசூய யாகம், கிருஷ்ணன் தூது, அரவான் பலி ஆகிய நிகழ்வுகளும், நாள்தோறும் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது.

Advertisement

Advertisement

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திங்கள்கிழமை (ஏப்.27) கம்பம் நிறுத்துதல் நடைபெற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை அரவான் கண் திறத்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து திருநங்கைகள், திருநம்பிகள் கோயில் பூசாரியிடம் மாங்கல்யம் (தாலி) கட்டிக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. திருவிழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமல்லாது, நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருநங்கைகள், திருநம்பிகள் கூவாகத்தில் குவிந்தனர்.

கோயில் பூசாரியிடம் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

புதுமணப்பெண் போல அலங்கரிப்பு : தங்களை புதுமணப்பெண் போல ஆடை, அணிகலன்களால் அலங்கரித்துக் கொண்ட திருநங்கைகள், கைநிறைய வளையல், தலை நிறைய பூக்களை சூடிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து தேங்காய், பழம், சூடம் போன்றவற்றை திருநங்கைகள் வாங்கிக் கொண்டு, நீண்ட வரிசையில் சென்ற திருநங்கைகள் கோயில் பூசாரியின் கைகளால் மாங்கல்யம் (தாலி) கட்டிக் கொண்டனர்.

பிறகு தங்கள் கணவராக அரவானை நினைத்து பொங்கல் வழிபட்டனர். தொடர்ந்து கோயில் அருகே திருநங்கைகள் கும்மியடித்து, ஆடிபாடி மகிழ்ந்தனர். திருநங்கைகளைப் போன்று, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் தங்களது வேண்டுதல் நிறைவேற கோயில் பூசாரியிடம் மாங்கல்யம் கட்டிக் கொண்டு வழிபட்டனர்.

கோயிலில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கை

கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள், பொதுமக்கள் பங்கேற்பார்கள் என்பதால், சிறிய அளவிலான குடிநீர்த் தொட்டிகள்,டேங்கர் லாரிகள், டிராக்டர்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் பயோ கழிவறைகள் வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

சிறப்புப் பேருந்துகள் இயக்கம் : கூவாகம் கிராமத்திலிருந்து 2 கி.மீ. தொலைவுக்கு அப்பால் பகுதியில் தற்காலிகபேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, சிறப்புப்பேருந்துகள் இயக்கப்பட்டன. விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் என பல்வேறு ஊர்களிலிருந்தும் கூவாகம் கிராமத்துக்கு சிறப்புப் பேருந்துகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் இயக்கியது.

120-க்கும் மேற்பட்ட கேமராக்கள்: திருவிழா நிகழ்வுகளை பொது மக்கள் காணும் வகையில் எல்இடி திரைகளும் அமைக்கப்பட்டிருந்தன. கோயில் வளாகம், கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் குற்றச் செயல்களைக் கண்காணிக்கும் வகையில் 120-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இதை கோயில் அருகிலுள்ள புறக்காவல் நிலையத்திலிருந்து போலீசார் கண்காணித்தனர். கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பொதுமக்களுக்குத் தனி வழியும், திருநங்கைகளுக்குத் தனி வழியும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 1000-த்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கோயிலுக்குச் செல்லும் வழியிலேயே ஆங்காங்கே காவல்துறை சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வேன், கார் உள்ளிட்டவாகனங்கள் அதற்கான நிறுத்தமிடப்பகுதிக்குத் திருப்பி விடப்பட்டன. இதன் காரணமாக குறிப்பிட்ட தொலைவிலிருந்து திருநங்கைகள் கோயிலுக்கு நடந்து சென்றனர்.

முன்னதாக, விழுப்புரம் சரகக் காவல்துறைத் தலைவர் அர. அருளரசு கூவாகம் கூத்தாண்டவர் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. அரவிந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இன்று தேரோட்டம் : புதன்கிழமை காலை (ஏப். 29) தேரோட்டம் நடைபெறும். தேர் புறப்பாடு ஆன பின்னர் அரவானைக் களப்பலி கொடுத்தல், திருநங்கைகள் தங்களது திருமாங்கல்யத்தை அறுத்துக் கொண்டு, வெள்ளாடை அணிந்து விதவைக்கோலம் பூண்டு, ஊர் திரும்புதல் ஆகியவை நடைபெற உள்ளன.

summary

Chithirai Festival at Koovagam Koothandavar Temple Transgender Women Tie the Sacred Knot

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments