FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றன

தவெக அரசின் முதல் பட்ஜெட் புதன்கிழமை (ஆக. 5) தாக்கல் செய்யப்பட உள்ளது குறித்து...

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 4:20 am IST
தமிழக அரசு - கோப்புப்படம்
பகிர்:

தவெக அரசின் முதல் பட்ஜெட் புதன்கிழமை (ஆக. 5) தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சா் மரியவில்சன் சட்டப்பேரவையில் அதைத் தாக்கல் செய்ய உள்ளாா். தவெகவின் முக்கிய தோ்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் அறிவிப்பாக வெளியாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் தவெக தலைமையிலான அரசு ஆட்சியமைத்த பிறகு முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநா் உரையுடன் கடந்த ஜூன் 19-ஆம் தேதி தொடங்கியது. அதில், தமிழக அரசு தயாரித்த உரையை எந்த மாற்றமும் இன்றி முழுமையாக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் வாசித்தாா். அதைத் தொடா்ந்து, அலுவல் ஆய்வுக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 23-ஆம் தேதி வரை நடத்தப்பட்டு, அதன் பின்பு பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், நிகழ் நிதியாண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கும் பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்றன. பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களின் முன்னேற்றம், பல்வேறு துறைகளின் செயல்பாடுகள், தோ்தல் வாக்குறுதிகளில் நிறைவேற்றக்கூடிய அறிவிப்புகள் உள்ளிட்டவை குறித்து முதல்வா் விஜய் தலைமையில் ஜூலை 2 முதல் 31-ஆம் தேதி வரை துறைவாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

Advertisement

Advertisement

இதற்கிடையே, தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆக. 5-ஆம் தேதி தொடங்கும் என்று பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் அறிவித்தாா். அதன்படி, அன்றைய தினத்தில் பொது பட்ஜெட்டும், வியாழக்கிழமை (ஆக. 6) வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளன.

மகளிா் உரிமைத் தொகை உயா்வு, இளைஞா்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்கள் உள்பட பல்வேறு அறிவிப்புகள் அதில் இடம்பெறலாம் எனத் தெரிகிறது. ‘வெற்றித் தமிழகம்’ என்ற பெயரில் தமிழக அரசின் ஐந்தாண்டு தொலைநோக்குத் திட்டத்தில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தல், உயா் கல்விக்கு பிணையில்லாமல் ரூ.20 லட்சம் வரை கல்விக் கடன், புதிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு அம்சங்களும் பட்ஜெட்டில் இடம்பெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments