தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்..!
தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து...
2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய நிதிநிலை அறிக்கையை புதிதாக அமைந்த தவெக அரசு புதன்கிழமை (ஆக.5) தாக்கல் செய்து வருகிறது.
2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய நிதிநிலை அறிக்கையை புதிதாக அமைந்த தவெக அரசு புதன்கிழமை (ஆக.5) தாக்கல் செய்து வருகிறது. நிதியமைச்சா் என்.மரிய வில்சன் காலை 10 மணிக்கு முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
இதில், பெண்கள், இளைஞா்கள், பள்ளி மாணவர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் புதிய அறிவிப்புகள் இடம்பெற்று வருகிறது.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டை வறுமையில்லாத, அனைவருக்கும் சம வாய்ப்பை வழங்கி அதன் மூலம் சமூக நீதியை நிலைநாட்டும் மாநிலமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாநிலத்தை நிதி நெருக்கடியில் இருந்து மீட்க பல்வேறு முயற்சிகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.
* அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் தூய்மை மற்றும் பாதுகாப்பு பணிகளில் மேற்கொள்ளப்படும்.
முதல் கட்டமாக பத்தாயிரம் பள்ளிகளில் இந்த பணிகளை மேற்கொள்ள ரூ.129 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு
* 3,734 அரசுப்பள்ளிகளில் ரூ.2,132 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கல் திட்டம். நடப்பாண்டிற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.
* பள்ளி பாடத்திட்டம் மறுசீரமைப்பிற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு.
* பள்ளிக்கல்விக்கு ரூ.44.527 கோடி நிதி ஒதுக்கீடு
* பள்ளிகளில் போதைப்பொருள் மற்றும் அதன் தவறான பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த 1058 என்ற உதவி எண் பள்ளி வளாகத்தில் காட்சிப்படுத்தப்படும். இதை செயல்படுத்த ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு.
* அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 5,32 லட்சம் பேருக்கு தலைக்கவசம், வாட்டர்பாட்டில் வசதிகளுடன் ரூ.277 கோடி மதிப்பில் நவீன சைக்கிள் வழங்கப்படும்.
* பொது நூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மறுவடிவமைப்பு செய்ய ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
* செய்யறிவு பாடத்திட்ட வடிவமைப்புக்கு நிபுணர் குழு அமைப்பு
நீட் தேர்வை தொடர்ந்து தமிழக அரசு எதிர்த்து வருகிறது. பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்தவும், நீட் தேர்வை ரத்து செய்யவும் மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்துகிறது.
* உயர்கல்வித் துறைக்கு ரூ.8,393 கோடி நிதி ஒதுக்கீடு.
* சிறப்பு அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்படும்.
* டிஜிட்டல் மாற்றத்திற்கேற்ப தமிழகத்தை உருவாக்க திட்டம்.
* தனித்துவமான செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டத்தினை வடிவமைக்க கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை முன்னோடிகள் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்படும்.
* பாரம்பரிய கிராமிய விளையாட்டு போட்டிகளுக்காக ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு.
* தமிழக இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ரூ.1,051 கோடி ஒதுக்கீடு.
* அயோத்திதாச பண்டிதர் வாழ்விட மேம்பாட்டுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு
* சமூக நீதித்துறைக்கு ரூ.3,937 கோடி ஒதுக்கீடு.
* 500 புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டடப்படும்.
* சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு ரூ.17,150 கோடி நிதி ஒதுக்கீடு.
* தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு ரூ.2,022 கோடி நிதி ஒதுக்கீடு
* மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதித்ததன் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* தவெக அரசின் பல்வேறு நடவடிக்கையால் அரசுக்கு ரூ.15,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க மேம்பாட்டுக் குழுவை விரைவில் அரசு அமைக்கவுள்ளது.
* வறுமை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க 2036 ஆம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் உள்ள மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அண்ணன் சீர்
* பெண்களுக்கு திருமணத்தின் போது அரசு சார்பில் 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்கும் அண்ணன் சீர் திட்டத்துக்கு ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு
விளையாட்டுப் பயிற்சி
* பள்ளி நேரத்திற்கு பிறகு நாள்தோறும் ஒரு மணி நேரம் முறைப்படுத்தப்பட்டு விளையாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.
* விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி வழங்க கூடுதலாக ரூ.22 கோடி ஒதுக்கீடு.
கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினித் திட்டம்
* திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட உலகம் உங்கள் கையில் திட்டத்தின் பெயர், வெற்றி மடிக்கணினி திட்டம் என மாற்றி நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு. இந்த திட்டத்திற்கு ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு.
* கூட்டுறவுத் துறைக்கு ரூ.8,028 கோடி நிதி ஒதுக்கீடு.
* உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் புற்றுநோய்க்கு தொடர் சிகிச்சை பெறும் நோயாளிகளின் மருந்து தேவையை பூர்த்தி செய்ய தடையற்ற மருந்து விநியோகம் செய்யப்படும்.
* மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.23,357 கோடி நிதி ஒதுக்கீடு.
* கருவுற்ற பெண்களுக்கான சேவை மற்றும் உதவி மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும்.
* மகப்பேறு நாள் நெருங்கும் வேளையில் தங்கியிருந்து இங்கு பயன்பெறலாம், கட்டணமில்லா உணவு மற்றும் மருத்துவ உதவிகள் தொடர் மருத்துவ கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகள் வவங்கப்படும். இந்த திட்டத்திற்காக ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு.
வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டம்
* வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தில் 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் வழங்கப்படும்.
கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள், மாற்றுத்திறனாளிகள் இந்த திட்டத்தில் பயன்பெறுவார்கள். மொத்தம் 30,000 பயனாளிகளுக்கு இந்தி திட்டம் செயல்படுத்தப்படும்.
* சிறு, குறு, நடுத்தர தொழில்துறைக்கு ரூ.2,142 கோடி ஒதுக்கீடு.
* கால்நடைகள் காப்போம் திட்டத்துக்கு ரூ.38 கோடி நிதி ஒதுக்கீடு.
* திருப்பூரில் ரூ.10 கோடியில் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி மையம் அமைக்கப்படும்.
* தமிழ்நாடு ஆடை வடிவமைப்பு நிறுவனம் கொண்டு வரப்படும். இதற்காக ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு.
* செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்பவியல் துறைக்கு ரூ.398 கோடி நிதி ஒதுக்கீடு.
* சென்னை மாநிகரின் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் திட்டம் செயல்படுத்தப்படும். மாநிலத்தில் பிற பகுதிகளில் இந்த திட்டம் 50 லட்சம் தொழில் மற்றும் வணிக நுகர்வோருக்கு விரிவாக்கம் செய்யப்படும்.
* வீட்டு மேற்கூரை சூரிய மின் மானிய திட்டம் அறிமுகம் செய்யப்படும். சூரிய மின்பலகைக்கு ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.
* வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறைக்கு ரூ.8,852 கோடி நிதி ஒதுக்கீடு.
உலகத்தரத்திற்கு சென்னையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 5,904 கிலோ மீட்டர் பரப்பளவில் விரிவுப்படுத்தப்பட்ட சென்னை பெருநகர பகுதிக்கான விரிவான முழுமையான திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு.
உலக நகரங்களை உருவாக்க இலக்கு
* முதல்வரின் ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குடிநீர், சாலைகள், கழிவுநீர், போக்குவரத்து, பசுமை மற்றும் மின் ஆளுமை ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்படும். இதன் மூலம் 2031 ஆம் ஆண்டுக்குள் உலக நகரங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2,117 கோடி நிதி ஒதுக்கீடு
அடையாறு-கூவம் ஆற்றில் படகு போக்குவரத்து
* சென்னை அடையாறு, கூவம் ஆறுகளை சுத்தப்படுத்துவதற்கும், அழகுப்படுத்துவதற்கு முந்தைய அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்தும் மாற்றங்கள் நடைபெறவில்லை. கூவம், அடையாறு ஆறுகளை இயல்பு நிலைக்கு கொண்டு வர இந்த அரசு பாடுபடும். குளோபல் டெண்டர் கோரப்பட்டு விரைவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆறுகள் சுத்தம் செய்யப்படும்.
அடையாறு, கூவம் ஆறுகளில் பொதுமக்கள் படகு சவாரி செயவதையும், ஆனந்த குளியல் போடுவதையும், கரைகளில் உயற்பயிற்சி செய்வதையும் இந்த அரசு உறுதி செய்யும்.
* நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.29,863 கோடி நிதி ஒதுக்கீடு.
அனைத்து நீர் சார்ந்த திட்டங்களும் பாதுகாக்கப்படும்
* மேக்கேதாட்டு உள்ளிட்ட மாநில நலன்களை பாதிக்கும் திட்டங்கள் எதிர்க்கப்படும். தமிழகத்துக்கு அனைத்து நீர் சார்ந்த திட்டங்களையும் அரசு பாதுகாக்கும். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துதல், கோதாவரி-காவிரி நிதிநீர் இணைப்பு திட்டத்தை விரைவாக இணைக்க வலியுறுத்தப்படும்.
* சென்னைக்கு 1000 புதிய குளிர்சாதன மின் பேருந்துகள் வழங்கப்படும்.
* பேருந்து பணிமனைகளில் இவி உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.
3 மெட்ரோ வழித்தடங்களுக்கு பரிந்துரை
* சென்னையில் 3 புதிய மெட்ரோ வழித்தடங்களுக்கு மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம், கோயம்பேடு-பட்டாபிராம், பூந்தமல்லி-சுங்குவார்சத்திரம் வழித்தடங்களில் மெட்ரோ திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* பெங்களூரு-ஓசூர் இடையே மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு, கர்நாடாக அரசுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
* காவிரி-வைகை-குண்டாறு நதி இணைப்பு திட்டத்திற்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு.
* பெண்ணையாறு-செய்யாறு பெண்ணையாறு-பாலாறு மற்றும் தாமிரவருணி வைப்பாறு திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கையினை தயார் செய்ய ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.
* நதி இணைப்பு நீர்வலம்-விவசாய வளம் திட்டத்திற்காக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.
100 நாள்கள் வேலைவாய்ப்பு வெற்றி 150 நாள்களாக அறிவிப்பு
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் 'வெற்றி 150' என்ற முன்முயற்சியில் 125 நாள்கள் நிறைவு செய்த நலிவுற்ற, ஏழை எளிய குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாள்கள் அரசு வேலை வழங்கப்படும். 125 நாள்களாக இருக்கும் வேலை நாள்கள் இனி 150 நாள்களாக வழங்கப்படும். இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்கிறது.
* சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை மேம்படுத்த ரூ.354 கோடி நிதி ஒதுக்கீடு.
வெற்றி வீடு திட்டம்
* புதிய மாநில வீட்டுவசதித் திட்டமான வெற்றி வீடு திட்டம் அறிமுகம். வீட்டு அலகுத் தொகை ரூ.3.10 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும். முதல் ஆண்டு ரூ.3,000 கோடியில் 70,000 வீடுகள் கட்ட ஒப்புதல் வழங்கப்படும்.
* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3,914 கோடி நிதி ஒதுக்கீடு.
* ஒவ்வொரு ஆண்டும் 10,000 தகுதி வாய்ந்த பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கப்படும்.
எம்ஜிஆருக்குப் பின் உண்மையான மீனவ நண்பர் முதல்வர் விஜய்.
மீனவர் நலன் உதவித்தொகை உயர்வு
* பணியில்லாக் கால மீன்பிடி உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம்1.93 லட்சம் மீனவர்கள் குடும்பங்கள் பயன்பெறும். இதற்காக ரூ.135 கோடி நிதி ஒதுக்கீடு.
* அரசின் சேவைகளை குறித்த காலத்தில் பெறும் சேவை உரிமை சட்டம் அறிமுகம்.
மகளிர் சுய உதவிக்குழுக்களை குறுந்தொழில் நிறுவனங்களாக மேம்படுத்த புதிய திட்டம்.
* மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இந்த ஆண்டு ரூ.38,000 கோடி கடன் வழங்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* மகளிர் சுய உதவிக்குழு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் முதலீட்டு மானியம் வழங்கப்படும்.
* ரேசன் கடைகளில் கோதுமை மாவு பாக்கெட் வழங்கும் திட்டத்திற்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு.
* எல் நினோ பாதிப்புகளை எதிர்கொள்ள ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு.
* உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைக்கு ரூ.17,290 கோடி நிதி ஒதுக்கீடு.
* ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு ரூ.39,609 கோடி நிதி ஒதுக்கீடு.
* உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு ரூ.14,830 கோடி நிதி ஒதுக்கீடு
* முதல்வர் விபத்து நிவாரண நிதிக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.
* மனித-வனவிலங்கு மோதலை தடுக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு
Key highlights of the TVK government's first budget...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.