வருகையில்லா ஆவணப்பதிவு! பதிவுத்துறையில் புதிய திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர்!
பதிவுத்துறையில் இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு செய்யும் நடைமுறையைத் தொடக்கி வைத்த முதல்வர் விஜய்.
வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், தமிழ்நாட்டில் உள்ள மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் வீடு விற்பனை ஆவணங்களைப் பதிவுத்துறையில் இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு (Presenceless Registration) மூலம் மட்டுமே கட்டாயமாகப் பதிவுசெய்யும் நடைமுறையை முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஆக. 17) தலைமைச் செயலகத்தில்,தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்செல்வன், வணிகவரி, பதிவுத்துறை மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் ஜெ. குமரகுருபரன், பதிவுத்துறைத் தலைவர் ஜி.கே. அருண் சுந்தர் தயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்த பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியே ஆவணப்பதிவு முறையினை பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் (24X7X365) இணையதளத்தின் மூலம் இணையவழி தங்களது ஆவணங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.
ஆவணப் பதிவிற்கு சார்பதிவாளர் ஒப்புதல் அளித்ததும், சார்பதிவாளரின் மின்னணு கையொப்பத்துடன் ஆவணமானது சம்பந்தப்பட்ட நபரின் உள்நுழைவிற்கும் அலைபேசிக்கு புலனம் (Whatsapp) மூலமும் அனுப்பி வைக்கப்படும். அந்த ஆவணத்தை ஆவணதாரர்கள் தங்கள் உள்நுழைவு வழியே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணைய வழியில் பதிவு தாக்கல் செய்யும்போது, சொத்தை எழுதிக்கொடுப்பவா் மற்றும் எழுதி வாங்குவோரின் அடையாளமான விரல் ரேகை ஆதார் ஆணையத்துடன் சரிபாா்க்கப்பட்டு, இணைய வழி கட்டணம் செலுத்திய உடன் சமா்ப்பிக்கப்பட்ட ஆவண விவரங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில், ஆவணம் உடனுக்குடன் பதிவுசெய்து சார் பதிவாளரின் மின்னணு கையொப்பம் இட்டு மின்னணு ஆவணமாக இணையதள வழியாக ஆவணதாரா்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
ஆவணம் மற்றும் ரசீது ஆகியவற்றை ஆவணதாரா் தங்களது உள்நுழைவு / இணையவழியில் 60 நாள்களுக்குள் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும், வருகையில்லா ஆவணப்பதிவு முறையில் பதிவு செய்யப்படும் கிரய ஆவணங்களைப் பொருத்து, தானியங்கி பட்டா மாறுதல் முறையில் ஆவணம் பதிவுசெய்த உடன் பட்டா மாறுதல் செய்யப்படும்.
Chief Minister Vijay inaugurated the online, in-person-visit-free document registration procedure in the Registration Department.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.