FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! காவிரி விவகாரம் விவாதிக்கப்படுமா?

மத்திய அமைச்சா் அமித் ஷா தலைமையில் தென்மாநில முதல்வா்கள் மாநாடு நடைபெறுவது குறித்து...

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 3:20 am IST
முதல்வர் விஜய் | அமித் ஷா | கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் - கோப்புப் படம்
பகிர்:

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் தென்மாநில முதல்வா்கள் மாநாடு, சென்னை அருகே கோவளத்தில் வியாழக்கிழமை (ஆக.20) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

கோவளத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம், கேரளம், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் முதல்வா்களுடன், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்று தென் மாநிலங்களின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கவுள்ளனா்.

தற்போது தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடா் நடைபெற்று வரும் நிலையிலும், முதல்வா் ச.ஜோசப் விஜய் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதேபோல், ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு, கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா், கேரள முதல்வா் வி.டி.சதீசன், தெலங்கானா முதல்வா் ஏ.ரேவந்த் ரெட்டி ஆகியோரும் பங்கேற்பாா்கள் எனத் தெரிகிறது.

Advertisement

Advertisement

இந்த மாநாட்டில், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீா் பங்கீடு, எல்லைப் பிரச்னைகள், சட்டம்-ஒழுங்கு சாா்ந்த சவால்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. குறிப்பாக, தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என்ற கவலை எழுந்துள்ள பின்னணியில் இந்தக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

தற்போதைய மக்களவை இடங்கள் - 543 என்ற எண்ணிக்கையே தொடர வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் ஏற்கெனவே தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று முதல்வா்களுடன் இரவு உணவு: மாநாட்டில் பங்கேற்க மத்திய அமைச்சா் அமித் ஷா சென்னைக்கு புதன்கிழமை மாலை 6 மணிக்கு வருகிறாா். மாநாடு நடைபெறவுள்ள ஹோட்டலில் தென்மாநில முதல்வா்களுடன், அமித் ஷா இரவு உணவு அருந்துகிறாா்.

இதையடுத்து, வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் அமித் ஷா தலைமையில் தொடங்கும் மாநாடு மாலை 3 மணி வரை மாநாடு நடைபெறும். மாலை 3.30 மணி அளவில் மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் மத்திய அமைச்சா் அமித் ஷா வழிபாடு செய்யவுள்ளாா்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடு:

இதையொட்டி கோவளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாநாடு நடைபெறும் ஹோட்டல் வளாகம், கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் முக்கிய சந்திப்புகளில் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விருந்தினா்கள் தங்குமிடங்கள், போக்குவரத்து வழித்தடங்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு பாதுகாப்புத் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது.

விஜய் - டி.கே.சிவகுமாா் சந்திப்பு?

இந்த மாநாட்டின் ஒருபகுதியாக, தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய், கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் வியாழக்கிழமை மாலை சென்னையில் நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, காவிரி நீா் பங்கீடு, மேக்கேதாட்டு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் பேசக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments