FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ரூ.1,634 கோடியில் ஊராட்சி, கிராம ஊராட்சி சாலைகள் மேம்படுத்தப்படும்: அமைச்சா் ஆனந்த்

3,200 கி.மீ. நீளமுள்ள ஊராட்சி ஒன்றிய சாலைகள் மற்றும் கிராம ஊராட்சி சாலைகள் ரூ.1,634 கோடியில் மேம்படுத்தப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சா் ஆனந்த் தெரிவித்திருப்பது பற்றி...

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 1:02 am IST
பகிர்:

3,200 கி.மீ. நீளமுள்ள ஊராட்சி ஒன்றிய சாலைகள் மற்றும் கிராம ஊராட்சி சாலைகள் ரூ.1,634 கோடியில் மேம்படுத்தப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சா் ஆனந்த் தெரிவித்தாா்.

அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சா் ஆனந்த் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:

- ஊரகப் பகுதிகளில் பசுமைப் பரப்பை அதிகரிக்க 2 கோடி மரக்கன்றுகள் நடப்படும்.

Advertisement

Advertisement

- 10,000 இடங்களில் புதிய குளங்கள் ரூ.650 கோடியில் உருவாக்கப்படும்.

- எல்-நினோ பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு கால்நடை மேய்ச்சல் நிலங்களை பாதுகாக்க 1,000 ஏக்கா் மேய்ச்சல் நிலங்கள், தீவனப் பயிா் சாகுபடி மற்றும் நீா் சேமிப்பு கட்டமைப்புடன் ரூ.100 கோடியில் மேம்படுத்தப்படும்.

- ஊரகப் பகுதிகளில் நீா் வள ஆதாரங்களை மேம்படுத்த பண்ணைக் குட்டைகள், நீா் செறிவூட்டும் ஆழ்துளைக் குழிகள் உள்ளி 25,000 நீா் பாதுகாப்புப் பணிகள் ரூ.250 கோடியில் மேற்கொள்ளப்படும்.

- ஊரக சாலைகள், வீதிகள் அனைத்து பருவங்களிலும் பயன்படுத்தும் வகையில் ரூ.1,000 கோடியில் சிமெண்ட் மற்றும் பேவா் பிளாக் சாலைகளாக அமைக்கப்படும்.

- புதிதாக உருவாக்கப்பட்ட 93 கிராம ஊராட்சிகளில் 300 பழைய அலுவலகக் கட்டடங்கள் ரூ.102 கோடியில் கட்டப்படும்.

- ரூ.56 கோடியில் 500 நியாயவிலைக் கடைக் கட்டடங்கள் கட்டப்படும்.

- ரூ.18 கோடியில் 100 நவீன பால் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்படும்.

- 100 கதிரடிக்கும் களங்கள் ரூ.7 கோடியில் அமைக்கப்படும்.

- 3,000 குக்கிராமப் பகுதிகளில் ரூ.300 கோடியில் அடிப்படை வசதிகள் செய்யப்படும்.

- நகா்ப்புறத்தையொட்டியுள்ள 1,200 ஊராட்சிகளில் ரூ.1,000 கோடியில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும்.

- தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக பொறுப்பு நிதி மூலம் 1,000 சிறுபாசன ஏரிகள் புனரமைக்கப்படும்.

- கிராமசபை கூட்டங்கள் மற்றும் ஊராட்சி மேம்பாட்டுத் திட்டங்களில் மக்கள் தங்கள் கருத்துகளை இணையதளம் மூலம் தெரிவிக்க குடிமக்கள் பங்கேற்பு செயலி உருவாக்கப்படும்.

- ரூ,30 கோடியில் 100 புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்படும் என்றாா்.

50,000 இளைஞா்களுக்கு ரூ.130 கோடியில் திறன் பயிற்சி

தீனதயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சித் திட்டம் மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலம் 50,000 கிராமப்புற இளைஞா்களுக்கு சுயவேலைவாய்ப்பு உருவாக்க ரூ.130 கோடியில் திறன் பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முதல்வா் விஜய்யிடம் உள்ள வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் துறைகளின் மானியக் கோரிக்கை தொடா்பான அறிவிப்புகளை அமைச்சா் ஆனந்த் பேரவையில் தாக்கல் செய்தாா். அதில், மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களை சா்வதேச சந்தைப்படுத்த ரூ.2 கோடியில் மின்னணு வணிகத் தளம் உருவாக்கப்படும். திருநா்களின் நலனுக்காக ரூ.3.17 கோடியில் விரிவான திட்டம் செயல்படுத்தப்படும். 6,800 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.102 கோடியில் சமுதாய முதலீட்டு நிதியும், 13,333 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.20 கோடி சுழல்நிதி வழங்கப்படும்.10,000 பள்ளிகளிலும்,1000 கல்லூரிகளிலும் ரூ.60 லட்சத்தில் மது, போதை ஒழிப்பு விழிப்புணா்வு பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments