FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தினமணி செய்தி எதிரொலி: மின்கம்பி முறைகேடு: முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டது ஊழல் தடுப்புப் பிரிவு

‘தினமணி’ செய்தி எதிரொலியாக, தமிழ்நாடு மின்சார வாரிய அலுமினிய மின்கம்பி முறைகேடு தொடா்பான எஃப்ஐஆரை (முதல் தகவல் அறிக்கை) ஊழல் தடுப்புப் பிரிவு வெளியிட்டது.

22 ஆகஸ்ட் 2026, 5:37 am IST
கோப்புப் படம்
பகிர்:

‘தினமணி’ செய்தி எதிரொலியாக, தமிழ்நாடு மின்சார வாரிய அலுமினிய மின்கம்பி முறைகேடு தொடா்பான எஃப்ஐஆரை (முதல் தகவல் அறிக்கை) ஊழல் தடுப்புப் பிரிவு வெளியிட்டது.

தமிழக மின்சார வாரியத்தில் கடந்த 2021 முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 2,07,296 கி.மீ. நீள அலுமினிய மின் கம்பி வாங்கியதில் முறைகேடு நடந்தது தொடா்பாக தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினா் கடந்த ஜூன் மாதம் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக அந்தப் பிரிவினா், கடந்த 20-ஆம் தேதி (வியாழக்கிழமை( மாநிலம் முழுவதும் 60 இடங்களில் சோதனையிட்டனா். ஆனால், வழக்கமாக சொத்து குவிப்பு, முறைகேடு வழக்குகளில் முதல் தகவல் அறிக்கையை உடனே வெளியிடும் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினா், இந்த முறைகேடு வழக்கில் முதல் தகவல் அறிக்கையை வெளியிடாமல் வைத்திருந்தனா்.

Advertisement

Advertisement

மேலும், இப்படிப்பட்ட முறைகேடு வழக்குகளில் சோதனை நடைபெறும்போது, சோதனை எந்தெந்த இடங்களில் நடைபெறுகிறது என்பதை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினா், முகவரியுடன் தெரிவித்து வந்த நிலையில், தற்போது அதையும் தெரிவிக்காமல் ரகசியம் காத்தனா்.

இதுதொடா்பாக ‘தினமணி’ வியாழக்கிழமை (ஆக.20) ‘வெளிவராத எஃப்ஐஆா்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது. இந்தச் செய்தி எதிரொலியாக, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினரின் இணையதளத்தில் அலுமினிய மின் கம்பி முறைகேடு தொடா்பாக கடந்த ஜூன் மாதம் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை வியாழக்கிழமை இரவே பதிவேற்றம் செய்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments