எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு... தமிழ் வளர்ச்சித் துறைக்கு அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்!
தமிழ் வளர்ச்சித் துறைக்கு அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் குறித்து....
தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
சட்டப்பேரவை இன்று (ஆக. 24) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், பள்ளிக் கல்வி, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளர்ச்சி, உயர் கல்வித் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் இன்று நடைபெற்றன.
அமைச்சர்கள் ராஜ்மோகன், பெ. விஸ்வநாதன் ஆகியோர் விவாதத்துக்கு பதிலளித்து துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.
Advertisement
Advertisement
தமிழ் வளர்ச்சித் துறைக்கு அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:
காவியத் தமிழை உலகரங்கில் உயர்த்திப் பிடிக்கும் வகையில் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கு கூடுதல் நிதியாக ரூ. 5 கோடியே 75 லட்சம் வழங்கப்படும்.
கணினித் திரையிலும் கன்னல் தமிழ் வளர்க்கும் இணையத் தமிழ்ச்சுடர்கள் இருவருக்கு "இணையத் தமிழ்ச்செம்மல்" விருது வழங்கப்படும்.
தமிழறிஞர் பெருமக்கள் ஐவர் இயற்றிய அருந்தமிழ் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும்.
தீரத்துடன் தமிழ்நாட்டின் எல்லைகளைக் காத்த எல்லைக் காவலர்களின் சான்றாண்மையைப் போற்றும் விதமாக எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும்.
தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்களின் திறன்களை மெருகேற்றி, அவர்களை தரணியில் தலைசிறந்தவர்களாக உருவாக்கச் சிறப்புத் திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.
அன்னைத் தமிழை அணி செய்யும் விதமாக, தேசிய பன்னாட்டுக் கருத்தரங்கங்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும்.
தேடித் தேடி வாசிக்கும் தலைமுறைக்குத் தெவிட்டாத அறிவு அமுதம் படைக்க, அரிய நூல்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நூலகத்திற்கு கொள்முதல் செய்யப்படும்.
மண்ணின் குரலாய், மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த "நிகழ்த்துக்கலை" குறித்து, ஆழமான ஆய்வுப் புதையல்களை உலகிற்கு வெளிக்கொணரும் பொருட்டு, புதிய அரையாண்டு ஆய்விதழ் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்படும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.