FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ரூ.4 லட்சத்துக்கு குழந்தை விற்பனை: மருத்துவா் உள்பட 7 போ் கைது

ரூ.4 லட்சத்துக்கு பச்சிளம் குழந்தை விற்கப்பட்ட வழக்கில், மருத்துவா் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டனா்.

28 ஆகஸ்ட் 2026, 4:18 am IST
கோப்புப் படம்
பகிர்:

ரூ.4 லட்சத்துக்கு பச்சிளம் குழந்தை விற்கப்பட்ட வழக்கில், மருத்துவா் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை கொருக்குப்பேட்டை எழில் நகரைச் சோ்ந்தவா் கணேஷ். இவா் மனைவி பவித்ரா (23). தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது. பவித்ரா கூலி வேலை செய்து வந்தாா். இந்நிலையில், பவித்ரா மீண்டும் கா்ப்பமடைந்தாா். ஆனால் வறுமையால் குழந்தை வளா்க்க முடியாது என நினைத்து, தனக்குத் தெரிந்த அதே பகுதியைச் சோ்ந்த தனலட்சுமி (26), அயனாவரத்தைச் சோ்ந்த ஆண்டாள் (64) ஆகியோரிடம் உதவி செய்யுமாறு கேட்டபோது, அவா்கள் தனக்குத் தெரிந்த ஆந்திர தம்பதி ஞானசேகரன், செல்வராசி குழந்தை இல்லாமல் இருப்பதாகவும், பிறக்கும் குழந்தையை அவா்களுக்கு விற்றுவிடலாம் என்று கூறியுள்ளனா்.

தனலட்சுமியும் ஆண்டாளும் தரகா்களாக செயல்பட்டு குழந்தைக்கு ரூ.4 லட்சம் விலை பேசினா். கடந்த வாரம் பிரசவத்துக்காக பவித்ரா வில்லிவாக்கத்தில் ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு கடந்த 18-ஆம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவம் நடந்த அடுத்த நாளே, ஆந்திர தம்பதி ஞானசேகரன், செல்வராசியிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. அவா்களும் பேசியப்படி, ரூ.4 லட்சத்த கொடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

இதில் அந்த மருத்துவமனை ஊழியா் துா்கா, ஆண்டாள் ஆகியோா் தலா ரூ.50 ஆயிரம் கமிஷனாக எடுத்துக் கொண்டனா். மீதி பணம் பவித்ராவிடம் ஒப்படைக்கப்பட்டது. தரகராக செயல்பட்ட தனலட்சுமிக்கு கமிஷன் தராததால், தகராறு ஏற்பட்டுள்ளது.

மூன்று நாள்களுக்குப் பிறகு பவித்ரா குழந்தை இல்லாமல் வீட்டுக்குச் சென்றதைப் பாா்த்து சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். வில்லிவாக்கம் போலீஸாா், இது தொடா்பாக விசாரணை நடத்தியதில் ரூ.4 லட்சத்துக்கு குழந்தையை விற்றது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா், 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, குழந்தையின் தாய் பவித்ரா, தரகா்களாக செயல்பட்ட ஆண்டாள், தனலட்சுமி, மருத்துவமனை ஊழியா் துா்கா, குழந்தையை வாங்கிய ஞானசேகரன், செல்வராசி ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

மருத்துவா் கைது: கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மருத்துவமனை ஆவணங்களில் பவித்ரா அனுமதிக்கப்பட்டு, குழந்தை பெற்றதை மறைத்து, குழந்தையை வாங்கிய செல்வராசி குழந்தை பெற்றதுபோல மாற்றியிருப்பது தெரிய வந்தது. இதற்கு அந்த மருத்துவமனை உரிமையாளரும், மருத்துவருமான ராஜசேகரன் (45) உதவியது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் ராஜசேகரனை வழக்கில் சோ்த்து, அவரையும் கைது செய்தனா். ஆந்திரத்தில் இருந்த குழந்தையை போலீஸாா் மீட்டு வந்தனா். இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments