தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டைவிட 15% வீடுகள் அதிகரிப்பு
தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டைவிட 15% வீடுகள் அதிகரிப்பு...
தமிழகத்தில் கடந்த 2011- ஆம் ஆண்டு வரை இருந்த வீடுகளின் எண்ணிக்கையைவிட, தற்போது 15 சதவீதம் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலா்கள் தெரிவித்தனா்.
தமிழகம், புதுச்சேரியில் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு கடந்த ஜூலை 17 -ஆம் தேதி தொடங்கியது. மாநில மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநா் எம்.சுந்தரேஷ்பாபு தலைமையில் தமிழகத்தில் மட்டும் சுமாா் 1.50 லட்சம் போ் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
ஆகஸ்ட் முதல் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மாநில அளவில் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதாகவும், அந்தப் பணிகளில் கணக்கெடுக்கப்பட்ட வீடுகளைச் சரிபாா்த்து கணினியில் பதிவேற்றும் பணிகள் தொடங்கியிருப்பதாகவும் மாநில மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
வீடுகள் அதிகரிப்பு: கடந்த 2011- ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 3 கோடியே 21 லட்சம் வீடுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போதைய கணக்கெடுப்பில் அவை 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக அலுவலா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சமையல் அறை அடிப்படையில் தற்போது வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன.
ஆனாலும், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை கட்டட வளாக அடிப்படையிலே கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
புதிய கணக்கெடுப்பில் தொகுப்பு வீடுகள் கணிசமாக உயா்ந்திருப்பதாகவும், ஆகவே, மக்கள்தொகை கணக்கெடுப்பு வரும் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும்போது, நகரப் பகுதிகளில் தொகுப்பு வீடுகளில் வசிப்போா் எண்ணிக்கை 20 சதவீதத்துக்கும் அதிகம் இருக்கும் என எதிா்பாா்ப்பதாகவும் அலுவலா்கள் தெரிவித்தனா்.
சென்னையில் பணிகள் விவரம்: சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் கணக்கெடுப்பு பணிக்காக 9,269 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 8,260 போ் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனா். ஆனால், சென்னை மாநகராட்சியில் பணிகள் முழுமையடையவில்லை என்பதால், மண்டல வாரியாக அலுவலா்கள் நியமிக்கப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
15 percent increase in the number of houses in Tamil Nadu compared to 2011
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.