காவிரி நீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு நிலை அறிக்கை தாக்கல்
தமிழகத்துக்கான காவிரி நீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்திருப்பது குறித்து...
தமிழகத்துக்கான 17.604 டிஎம்சி நீரை காவிரியில் கர்நாடக அரசு உடனடியாக திறப்பதை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்ய வேண்டும் என நிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள நிலை அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
ஆக. 24-ல் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், தமிழகத்தின் பற்றாக்குறையை ஈடுகட்ட நாளொன்றுக்கு 22,000 கன அடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அவ்வாறு திறக்கப்பட்டால்தான், தமிழகத்துக்கு உரிய 28 டிஎம்சி நீர் கிடைக்கும். ஆனால், தமிழகத்தின் கோரிக்கையைக் கருத்தில் கொள்ளாமல், வெறும் 9,000 கன அடி மட்டுமே திறப்பதற்கு ஆணையம் உத்தரவிட்டது. மேலும், ஆணையம் பிறப்பித்த 9,000 கன அடி நீர் உத்தர்வைக்கூட கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை.
Advertisement
Advertisement
ஆக. 27 நிலவரப்படி, கர்நாடகத்தின் அணைகளில் 72.961 டிஎம்சி நீ இருந்தபோதிலும், வறட்சிக்கால விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்துக்கு உரிய நீரை திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிடவில்லை. மேலும், பாசனக் கால்வாய்கள் மற்றும் தடுப்பணைகள் மூலமாக சுமார் 20 டிஎம்சி காவிரி நீரை சட்டவிரோதமாக மடைமாற்றம் செய்து எடுத்துள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஜூன் முதல் தற்போது வரையில் தமிழகத்துக்கு 80.451 டிஎம்சி நீர் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், தற்போது வரை 25.598 டிஎம்சி நீர் மட்டுமே கிடைத்திருக்கிறது.
வறட்சிக் கால கணக்கீட்டின்படி பார்த்தாலும்கூட 43.202 டிஎம்சி நீர் கிடைத்திருக்க வேண்டும். காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த பாரபட்சமான உத்தரவைக்கூட கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை.
கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட மறிப்பதால், தமிழகத்தின் காவிரி டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறுவை சாகுபடிக்கான நீரைக்கூட திறந்துவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகையால், தமிழகத்துக்கு விகிதாச்சார அடிப்படையில் கிடைக்கவேண்டிய நீரை திறந்துவிடுவதற்கான உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். குறிப்பாக, தமிழகத்துக்கு கிடைக்கவேண்டிய பற்றாக்குறை நீர் 17.604 டிஎம்சி நீரை உடனடியாக திறந்துவிட உத்தரவிட வேண்டும்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்துவதை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
Cauvery Water Dispute: TN Govt files status report in Supreme Court
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.