தவெக அரசுடன் சேர்ந்து செயல்படாத மேயர் பிரியா!
சென்னை மேயர் பிரியா உள்பட மாநகராட்சிகளில் தவெக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவவதில்லை என ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து...
சென்னை மேயர் பிரியா உள்பட மாநகராட்சிகளில் தவெக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படுவதில்லை என பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது, "நகராட்சித் துறையில் ரூ. 5,000 கோடிக்கு திட்டங்கள் தீட்டப்பட்டு விட்டன. ஆனால், இன்றைக்கும் பெண்கள் காலிக்குடங்களுடன் தண்ணீருக்காக சாலைகளில் காத்திருக்கின்றனர். இன்றைக்கும் தண்ணீரை வீடுகளின் குழாய்களில் கொண்டுபோய் சேர்க்க முடியாத அரசாகத்தான் இருந்து வருகிறது.
இதுபோல ஒவ்வொரு பிரச்னையையும் சட்டப்பேரவையில் கூறும்போது, ஆதாரங்கள் இருக்கின்றனவா என எதிர்க்கட்சியினர் கேட்கின்றனர்.
Advertisement
Advertisement
அரசின் பிரச்னன் என்னவென்றால், உள்ளாட்சித் துறையானது, இன்றளவிலும் திமுகவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. 25 மாநகராட்சியும் உங்களிடம்தான் உள்ளது. உங்களின் மேயர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள்தான்.
முதல்வரின் துறையில் அனைத்து திட்டங்களும் நிதியும் ஒதுக்கப்பட்டாலும், அவற்றை நிறைவேற்றக்கூடிய இடத்தில் உங்களின் மேயர்கள், பேரூராட்சி துணைத் தலைவர்கள், நகராட்சித் தலைவர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் இருக்கின்றனர்.
தற்போது அரசு மாறிவிட்டது, அதிகாரம் மாறிவிட்டது. ஆனால், உள்ளாட்சித் துறையில் இன்னும் அதிகாரம் மாறாததால்தான், தவெக அரசுடன் மேயர்களோ மண்டலப் பொறுப்பாளர்களோ யாரும் சேர்ந்து செயல்படுவதில்லை.
சென்னையில் இருக்கும் மேயர்கூட, இந்த அரசுடன் சேர்ந்து செயல்படுவதில்லை. அவர் குற்றச்சாட்டுகளை மட்டும் வைத்துக் கொண்டிருக்கிறார்.
உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் 6 - 7 மாதங்கள்தான் உள்ளன. அந்தத் தேர்தலில் 100 சதவிகிதம் நாங்கள்தான் ஜெயிப்போம். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற பின், அனைத்து ஆதாரங்களும் வெளிவரும்" என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு பதிலளித்து எதிர்க்கட்சித் துணைத்தலைவர் கே.என். நேரு பேசியதாவது, "மேயர்களில் திமுகவினர் இருப்பதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறுகிறார். புதிய ஆட்சி வந்தபிறகு, எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த முடிவதில்லை. பணம் தரவில்லை. அனைத்தும் ஸ்தம்பித்துள்ளது.
கடந்த வாரத்தில் சென்னை மாநகராட்சிக்கு பணம் தரப்படவில்லை என கவுன்சிலர்கள் கறுப்பு உடை அணிந்து சென்றனர்.
திருச்சியை பொருத்தவரையில், சாலைக்காக ரூ. 392 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. 100 ஏக்கர் ஏரியை சரிசெய்வதற்காக ரூ. 34 கோடி வழங்கப்பட்டது. அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது. பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
செயலாளர்களை அழைத்து, எந்தெந்த இடங்களில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பதைக் கேட்டறிந்து, அவற்றை நடத்தச் சொல்லுங்கள்.
அரசின் திட்டங்களை கவுன்சிலரோ மேயரோ செய்யத் தவறினால், அதனைச் செயல்படுத்துவதற்கு ஆணையருக்கே அதிகாரமிருக்கிறது.
அனைத்து மேலாண்மை செய்வதற்கும் அரசுக்கு அதிகாரமிருக்கிறது. அதனைச் செய்யுங்கள்" என்று தெரிவித்தார்.
Mayor Priya is not working in coordination with the TVK government, says Minister Aadhav Arjuna
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.