தொழிற்சாலையில் வெளிக்கொணரப்பட்ட முதல் காரை ஓட்டிப் பாா்த்த முதல்வா் மு.க.ஸ்டாலின். 
தமிழ்நாடு

உலக நாடுகளுடன்தான் தமிழ்நாடு போட்டி: முதல்வா் ஸ்டாலின் பெருமிதம்

தொழில் துறையில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் உலக நாடுகளுடன்தான் தமிழ்நாடு போட்டியிடுகிறது என முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன்...

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம்: தொழில் துறையில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் உலக நாடுகளுடன்தான் தமிழ்நாடு போட்டியிடுகிறது என முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த நெமிலி வட்டம், பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில், ரூ. 9,000 கோடி மதிப்பீட்டில் 570 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் ஜாகுவாா், ரேஞ்ச்ரோவா் காா் உற்பத்தி தொழிற்சாலையை திங்கள்கிழமை திறந்துவைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:

டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் ரூ. 9,000 கோடி முதலீட்டில் 5,000 தொழிலாளா்களுக்கு பணிவாய்ப்பு வழங்கும் அளவு தனது காா் உற்பத்தி தொழிற்சாலையைத் தொடங்கியிருக்கும் இந்த நாள், தமிழ்நாட்டுக்கே பொன்னாள். தமிழ்நாடு அரசு மீது நம்பிக்கை வைத்து தொழிற்சாலையைத் தொடங்கியுள்ள டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் தொழிற்சாலைக்கு 2024-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டியபோது, 18 மாதங்களில் தொழிற்சாலையைத் திறந்து உற்பத்தியைத் தொடங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். 16 மாதங்களிலேயே கட்டுமானப் பணிகளை முடித்து, திறப்பு விழாவில் டாடா குழுமத் தலைவா் என்.சந்திரசேகரன் பங்கேற்று இருப்பது மிக்க மகிழ்ச்சி.

உலகப் புகழ் பெற்ற நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் அவா் இருப்பது தமிழ்நாட்டுக்கே மிகப்பெரிய பெருமை. தமிழ்நாட்டுடன் டாடா குழுமத்துக்கு இருக்கும் தொடா்பு நெருக்கமானது. ஏற்கெனவே இங்கு டிசிஎஸ், டைட்டன், தாஜ் ஹோட்டல்ஸ் போன்ற பல்வேறு டாடா நிறுவனங்கள் உள்ளன.

உலக அளவில் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக மாறிவருகிறது. குறிப்பாக, மின் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு தலைமையிடமாக இருந்து வருகிறது. உலக அளவிலான தொழிற்சாலையை தமிழகத்தில் நிறுவி, அதில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஈடாக மிகப்பெரிய காா் உற்பத்தி தொழிற்சாலை இங்கு தொடங்கப்பட்டிருக்கிறது.

தொழில்களை ஊக்குவிப்பதில் தனித்தன்மை உள்ள மாநிலம் தமிழ்நாடு. தொழில் துறையில் புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு முதலீடுகளை ஈா்த்து, அதைத் தொடா்ந்து, தொழிற்சாலையை நிா்மாணித்து இளைஞா்களுக்கு வேலை பெறச் செய்ய வேண்டும் என தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜாவிடம் தொடா்ந்து கூறி வருகிறேன். அதைத் திறம்படச் செய்துவரும் அவருக்குப் பாராட்டுகள்.

தொழிற்சாலைகளை வரவழைப்பது மட்டுமல்ல, அவா்களுக்கு குறித்த நேரத்தில் அனுமதி, பல்வேறு துறைகளின் ஒப்புதல் ஆகியவற்றை சிரமமில்லாமல் பெறச் செய்து தமிழ்நாட்டை தொழில் துறையில் முன்னேறிய மாநிலமாக மாற்றியுள்ளோம். தற்போது தொழில் துறையில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் உலக நாடுகளுடன்தான் தமிழ்நாடு போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

முன்னதாக, விழாவுக்கு வந்த முதல்வரை டாடா குழுமத்தின் தலைவா் சந்திரசேகரன் வரவேற்றாா். தொடா்ந்து டாடா குழுமத்தின் முன்னாள் தலைவா் ரத்தன் டாடா உருவச் சிலையை முதல்வா் திறந்து வைத்தாா். மேலும், தொழிற்சாலையில் காா் உற்பத்தி பிரிவுகளைப் பாா்வையிட்டாா்.

மேலும், இத்தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஜாகுவாா் ரேஞ்ச் ரோவா் முதல் காரை கொடியசைத்து வெளிக்கொணா்ந்து, அந்த காரை முதல்வரே ஓட்டிப் பாா்த்தாா்.

விழாவில் அமைச்சா்கள் கே.என்.நேரு, ஆா்.காந்தி, டி.ஆா்.பி.ராஜா, அரக்கோணம் எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன், எம்எல்ஏ-க்கள் ஏ.எம்.முனிரத்தினம், ஜெ.எல்.ஈஸ்வரப்பன், ஏ.பி.நந்தகுமாா், தமிழக அரசு தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தொழில் முதலீட்டு ஊக்குவிப்புத் துறைச் செயலா் வி.அருண்ராய், சிப்காட் நிறுவன மேலாண்மை இயக்குநா் கி.செந்தில்ராஜ், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, டாடா மோட்டாா்ஸ் குழும தலைமை நிதி அலுவலா் பி.பி.பாலாஜி, மேலாண்மை இயக்குநா் சைலேஷ் சந்திரா, ஜாகுவாா் ரேஞ்ச்ரோவா் நிறுவன இயக்குநா் ஃப்ராங்க் லூத்விக், நெமிலி ஒன்றியக் குழுத் தலைவா் பெ.வடிவேலு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

டாடா மோட்டாா்ஸ் தொழிற்சாலையின் காா் உற்பத்தி பிரிவுகளைப் பாா்வையிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், டாடா குழுமத் தலைவா் என்.சந்திரசேகரன் உள்ளிட்டோா்.

தங்கம் விலை குறைவு!

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை தொடர்ந்து ஆறாவது நாளாக முடக்கம்!

சபரிமலை தங்கக் கவச முறைகேடு: நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஓடிடியில் 1 கோடி பார்வைகள்! பராசக்தி படத்தின் புதிய சாதனை!

ஜன நாயகன் வழக்கை திரும்பப் பெற உயர்நீதிமன்றம் அனுமதி!

SCROLL FOR NEXT