FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

காலியாக உள்ள 40 சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு: தனி நீதிபதி உத்தரவு ரத்து

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 40 சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கு 4 வாரங்களில் தேசிய மருத்துவ ஆணையம் கலந்தாய்வு நடத்த வேண்டும்

Updated On : 14 பிப்ரவரி 2026, 12:54 am IST
கோப்புப் படம்
பகிர்:

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 40 சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கு 4 வாரங்களில் தேசிய மருத்துவ ஆணையம் கலந்தாய்வு நடத்த வேண்டும் என தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

முதுநிலை மருத்துவப் படிப்புகளை முடித்த மருத்துவா்கள் அஜிதா, பிரீத்தி, நவநீதம் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நாடு முழுவதும் 5,000 சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புக்கான இடங்கள் உள்ளன. இந்தப் படிப்பில் சோ்வதற்கு நீட் தோ்வு எழுத வேண்டும். இவ்வாறு நீட் தோ்வு எழுதி தகுதி மதிப்பெண் பெற்றவா்களுக்கு 2 முறை கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இதில், பங்கேற்ற எங்களுக்கு விரும்பிய மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இந்தக் கலந்தாய்வு மூலம் இந்தப் படிப்புகளுக்குத் தோ்வு செய்யப்பட்டவா்கள் பலா் படிப்பில் சேரவில்லை. இந்த வகையில், கலந்தாய்வு முடிந்த பின்னரும், நாடு முழுவதும் தற்போது 600 சூப்பா் ஸ்பெஷாலிட்டி படிப்புக்கான இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

Advertisement

Advertisement

தமிழகத்தில் மட்டும் 40 இடங்கள் காலியாக உள்ளன. அதுவும், சென்னை மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, மதுரை மருத்துவ கல்லூரி ஆகிய மிக சிறந்த மருத்துவ கல்லூரிகளில் இடம் காலியாக உள்ளன. இந்த இடங்கள் எல்லாம் வீணாகக் கூடாது. எனவே, இந்த 600 இடங்களுக்கு 3-ஆவதாக கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, காலியாக உள்ள சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கு 4 வாரத்துக்குள் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் செயலாளா் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக.31-ஆம் தேதிக்குள் மருத்துவ மாணவா் சோ்க்கையை முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளதாகக் கூறி, இந்த வழக்கில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments