தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்களாக பணியாற்ற தேர்வாகியுள்ள 28 பேருக்கு பணி நியமன ஆணைகள் மற்றும் சிறந்த பயிற்றுநர்கள், விளையாட்டு ஒருங்கிணைப்பாளர், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 22 நபர்களுக்கு முதல்வரின் மாநில விளையாட்டு விருதுகள் மற்றும் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை விளையாட்டில் இந்தியாவின் தலைநகரமாக உருவாக்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் பணியாற்றிட தலைசிறந்த விளையாட்டு வீரர்களை பயிற்சியாளர்களாக நியமித்து வருகின்றார். மேலும், முதல்வரின் மாநில விளையாட்டு விருதுகளை வழங்கி வருகின்றார்.
அதனடிப்படையில் தடகளம், ஹாக்கி, ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ, பளுதூக்குதல், கபடி, டேக்வாண்டா, சைக்கிளிங், வாலிபால், கூடைப்பந்து, வாள்வீச்சு, குத்துச்சண்டை, நீச்சல், கேனோயிங் மற்றும் கயாக்கிங், வில்வித்தை, கால்பந்து, பாரா தடகளம், பாரா பாட்மிண்டன், பாரா பவர்லிஃப்டிங் ஆகிய விளையாட்டு பயிற்றுநர் பணியிடங்களுக்கு 28 சிறந்த விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2024-25 ஆண்டிற்கான முதல்வரின் மாநில விளையாட்டு விருதுகளுக்கு சிறந்த உடற்கல்வி ஆசிரியராக திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த விவேகானந்தா வித்யாஸ்ரமம் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை எஸ்.பூச்சியம்மாள், வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் ஆர். முனிராஜா, சிறந்த நடுவராக சைக்கிளிங் விளையாட்டு போட்டி நடுவர் டி.பழனி, சிறந்த பயிற்றுநராக தடகள பயிற்றுநர் ஜெ.பிரேம்ஆனந்த், கூடைப்பந்து பயிற்றுநர் செந்தில் செல்வன், சிறந்த விளையாட்டு போட்டி ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், சிறந்த விளையாட்டு நன்கொடையாளராக தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுவனம் (தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளைக்கு ரூ.2.00 கோடி நன்கொடை அளித்தற்க்காக), சிறந்த விளையாட்டு வீரர்களாக கூடைப்பந்து வீரர் ஹசீஃப் மொய்ன் பெக், பளுதூக்குதல் வீரர் என்.அஜித், சிறந்த விளையாட்டு வீராங்கனைகளாக செஸ் வீராங்கனை பி.சவீதாஸ்ரீ, பாரா பவர்லிப்டிங் வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2025-26 ஆண்டிற்கான முதலமைச்சரின் மாநில விளையாட்டு விருதுகளுக்கு சிறந்த உடற்கல்வி இயக்குநராக விழுப்புரம் மாவட்டம் பி.என்.தோப்பு நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் என்.தமிழரசு, சிறந்த உடற்கல்வி ஆசிரியராக பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திரு. ஹெச்.மைக்கேல் ஜஸ்டின், சிறந்த நடுவராக டென்னிஸ் விளையாட்டு போட்டி நடுவர் சையத் அக்ரம் ஜாவீத், சிறந்த பயிற்றுநர்களாக டேபிள் டென்னிஸ் பயிற்றுநர் மீனாட்சி கணேஷ், வாலிபால் மற்றும் பீச் வாலிபால் பயிற்றுநர் எஸ்.மகேஸ்வரி, சிறந்த விளையாட்டு போட்டி ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு அலைச்சறுக்கு (சர்ப்பிங்) சங்கம், சிறந்த விளையாட்டு நன்கொடையாளராக ஓப்போ மொபைல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளைக்கு ரூ.1.25 கோடி நன்கொடை அளித்தற்க்காக), சிறந்த விளையாட்டு வீரர்களாக பாரா பாட்மிண்டன் வீரர் சிவராஜன் சோலைமலை, ஹாக்கி வீரர் எஸ்.கார்த்தி, சிறந்த விளையாட்டு வீராங்கனைகளாக பாரா பாட்மிண்டன் வீராங்கனை நித்யஸ்ரீ சுமதி சிவன், தடகள வீராங்கனை கே.நந்தினி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பயிற்சியாளர்களாக தேர்வாகியுள்ள 28 பேருக்கு பணி நியமன ஆணை
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்களாக பணியாற்ற தேர்வாகியுள்ள 28 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கியதுடன், தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் குவித்திடும் வகையில் அர்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் 2024-25 மற்றும் 2025-26 ஆம் ஆண்டுகளுக்கான சிறந்த உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர், சிறந்த நடுவர், சிறந்த பயிற்றுநர்கள், சிறந்த விளையாட்டு ஒருங்கிணைப்பாளர், சிறந்த விளையாட்டு நன்கொடையாளர், சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சரின் மாநில விளையாட்டு விருதுகள் மற்றும் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.