பெரம்பூர் தொகுதி மக்களுக்கு வருகிறது சிறப்பு செயலி! முதல்வர் வருவது எப்போது?
பெரம்பூர் தொகுதி மக்களுக்கு சிறப்பு செயலி விரைவில் வருகிறது, ஆனால், முதல்வர் எப்போது வருவார் என கேள்வி
குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சாரம், தூய்மைப் பணிகள் என பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து புகார் அளிக்கவும், மனு அளிக்கவும் என, முதல்வர் ஜோசப் விஜய்யின் பெரம்பூர் தொகுதிக்கு சிறப்பு செயலி அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.
சிறப்பு செயலி வருகிறது, ஆனால், தேர்தலில் வெற்றி பெற்றால், பெரம்பூர் தொகுதிக்கு மாதம் ஒரு முறை நிச்சயம் வருவேன் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்த முதல்வர் ஜோசப் விஜய், இன்னமும் தன்னுடைய தொகுதி மக்களை வந்து சந்திக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அரசியல் நோக்கர்களும், இங்கிருக்கும் பெரம்பூர் தொகுதிக்கு முதல்வர் விஜய்யால் வர முடியவில்லையா என்று விமர்சனங்களை முன்வைத்தாலும், தொடர்ச்சியான அரசு நிகழ்ச்சிகள், நிர்வாக ஆலோசனைக் கூட்டங்கள் என முதல்வர் கடுமையான பணிச்சுமையில் இருப்பதால், விரைவில் பெரம்பூர் வருவார் என்று தவெக தரப்பில் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
பெரம்பூர் மக்களுக்கு என சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் செல்போன் செயலியை முதல்வர் விஜய் அடுத்த வாரம் செயல்பாட்டுக்குக் கொண்டுவரவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, பெரம்பூர் தொகுதிக்கு முதல்வர் விஜய் அடுத்த வாரம் வர வாய்ப்புள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
பெரம்பூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய எம்எல்ஏ அலுவலகத்தை, முதல்வர் விஜய் திறந்து வைக்கும் நிகழ்ச்சியுடன், சேர்த்து, இந்த செயலியை அறிமுகம் செய்யும் நிகழ்வும் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
என்னென்ன வசதி?
பெரம்பூர் பகுதி மக்கள், தங்கள் பகுதிகளில் குடிநீர் சேவை, மின்சாரம், சாலை வசதி, தூய்மைப்பணிகள் உள்ளிட்ட எந்த வகையான சேவை குறித்தும் முறையிடலாம். இந்த செயலி மூலம் அளிக்கும் அனைத்து விண்ணப்பங்களும், முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரிகள் மூலம் நேரடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பூர் மக்களுக்கான செயலியில் பதிவாகும் எந்த ஒரு முறையீட்டுக்கும் மூன்று நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். மேலும், ஒவ்வொரு துறை அதிகாரிகளும், இந்த செயலியில் நாள்தோறும் வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை, நடவடிக்கை எடுத்த விண்ணப்பங்கள் எண்ணிக்கையை கவனிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
சென்னையில் பெரம்பூர் தொகுதி, முதல்வரின் தொகுதி என்பதால், அங்கு தனிக் கவனம் செலுத்தப்படுகிறது. அண்மையில், மருத்துவமனை, விளையாட்டு அரங்கம், உணவுப்பூங்கா போன்றவற்றை அமைக்க சென்னை மாநகராட்சியால் ரூ.100 கோடி அளவில் திட்டங்களை செயல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
A special app for the people of the Perambur constituency is coming soon, but the question remains: when will the Chief Minister visit?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.