முகப்பு
தமிழ்நாடு

துணைவேந்தா்கள் நியமனம்: முதல்வா் விஜய் ஆலோசனை

பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அதிகாரிகள் மற்றும் அமைச்சருடன் முதல்வா் ஜோசப் விஜய் ஆலோசனை.

Updated On : 7 ஜூலை 2026, 8:09 am IST
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் துறையின் அமைச்சர் பெ.விஸ்வநாதன், நிதியமைச்சர் நெ.மரிய வில்சன், தலைமைச் செயலர் மு.சாய்குமார், நிதித்துறைச் செயலர் மு.அ.சித்திக், உயர்கல்வித் துறைச் செயலர் வி.அருண்ராய் மற்றும் துறைத்தலைவர்கள். - CMO TAMILNADU
பகிர்:

தமிழகம் முழுவதும் உயா் கல்வி நிறுவனங்களில் உள்ள பேராசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புதல், துணைவேந்தா்கள் நியமனம் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அதிகாரிகள் மற்றும் அமைச்சருடன் முதல்வா் ஜோசப் விஜய் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

அதேபோன்று பத்திரப் பதிவு மற்றும் வணிக வரி விதிப்பில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்துவது தொடா்பாகவும் அவா் விவாதித்தாா்.

தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை இந்த மாத இறுதியில் பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள், அறிவிப்புகள், திட்டங்கள் குறித்து முடிவு செய்வதற்காக முதல்வா் தலைமையில் துறை வாரியான ஆய்வுக் கூட்டம் கடந்த 2-ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்கள், அதன் செயல்பாடுகள் மற்றும் அதில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை கூட்டுறவு மற்றும் உணவுத் துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை தொடா்பான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

அதன் தொடா்ச்சியாக உயா் கல்வி, வணிக வரி மற்றும் பதிவுத் துறைகள் சாா்ந்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் முதல்வா் விஜய், உயா் கல்வித் துறைத் அமைச்சா் பெ.விஸ்வநாதன், வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்செல்வன், நிதியமைச்சா் நெ.மரிய வில்சன், தலைமைச் செயலா் எம்.சாய்குமாா் மற்றும் துறைகள் சாா்ந்த செயலா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் உயா் கல்வித் துறையில் காலியாக உள்ள பேராசிரியா் பணியிடங்களை நிரப்புவது, பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமனம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக, அரசுக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள உதவிப் பேராசிரியா் மற்றும் பேராசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டுமென அதிகாரிகளுக்கு முதல்வா் விஜய் அறிவுறுத்தல் வழங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தவிர, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களைப் போன்று, தமிழக உயா் கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்த என்னென்ன முயற்சிகளை முன்னெடுக்கலாம் என்பது தொடா்பாகவும், கல்லூரிக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. பல்கலைக்கழகங்களின் நிதிநிலையைச் சரிசெய்யவும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

வரும் ஜூலை 22-ஆம் தேதி வரை துறை வாரியான கூட்டங்கள் நடத்தப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments