FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கரூர் பலி! 36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்?

கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவத்தில் 36 குடும்பங்களில், 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன் என்பது குறித்து..

Updated On : 10 ஜூலை 2026, 3:10 pm IST
கரூர் | முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்துக்கு அரசுப் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்று, இன்று பணி ஆணைகளை வழங்கினார்.

கடந்தாண்டு செப்டம்பா் 27-ஆம் தேதி வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் 32 பேருக்கு அரசு வேலைக்கான பணிநியமன ஆணையை வழங்கவிருக்கிறார். இதற்கான, பலியானோர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேரும் 36 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. எனினும், 36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்குத்தான் தற்போது பணி ஆணை வழங்கப்படுகிறது. மற்ற 5 குடும்பங்களுக்கு பணி ஆணை ஏன் வழங்கப்படவில்லை என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

முன்னதாக, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பலியான 41 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.20 லட்சம் தவெக சார்பில் வழங்கப்பட்டது. தமிழக அரசு சார்பிலும் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

தற்போது, தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என அறிவித்த முதல்வர் விஜய், இன்று கரூர் வந்து, அரசுப் பணி ஆணைகளை நேரில் வழங்கவிருக்கிறார்.

பலியான 41 பேரும் 36 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இதில், தற்போது 31 பேருக்கு மட்டும் பணி ஆணை வழங்கப்படுகிறது. பலியான மேலும் 5 பேரின் குடும்பங்களில் வெவ்வேறு காரணங்களால் பணி ஆணை வழங்கப்படவில்லை.

அதாவது, இன்று காலை வரை 32 பேருக்கு பணி ஆணை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சாந்தி என்ற பெண்மணி, பணியாற்ற முடியாத நிலையில் இருப்பதால், அவருக்கு அரசுப் பணிக்கு மாற்றாக ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையை முதல்வர் விஜய் இன்று வழங்கினார்.

இவர் தவிர்த்து, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த ஒரு பெண்ணின் கணவர் காவல்துறையைச் சேர்ந்தவர் என்பதால், அவரது குடும்பத்துக்கு அரசு பணி வழங்கும் தேவை ஏற்படவில்லை.

ஒருவரது குடும்பத்துக்குள், பணி ஆணையை யாருக்கு வழங்க வேண்டும் என்பதில் மிகப்பெரிய சர்ச்சை நிலவுகிறது. இதனால், அவர்கள் குடும்பத்துக்கும் பணி ஆணை வழங்கப்படவில்லை.

உயிரிழந்த அஜிதா என்ற பெண்ணின் சகோதரர் பெங்களூரில் சொந்தமாக தொழில் செய்கிறார். எனவே அவரும் பணி ஆணை பெறவில்லை. உயிரிழந்த ஒருவரின் பெற்றோர் வயதானவர்கள் என்பதால் அவரது குடும்பத்துக்கும் அரசுப் பணி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்த முதல்வர் விஜய், அங்கிருந்து காரில் கரூர் வந்தார். பகல் 12 மணியளவில் கரூா் வெண்ணைமலையில் உள்ள அட்லஸ் கலையரங்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்த அரசியல் சதியை, அடுத்த தலைமுறையும் அறிந்துகொள்ளும் வகையில், தவெக சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

summary

Regarding the issue of why government jobs were provided to only 31 individuals from the 36 families affected by the stampede tragedy in Karur...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments