FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வேளாண் நிதிநிலை அறிக்கை: விவசாயிகளின் குரலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் - அமைச்சர் வினோத்

வேளாண் நிதிநிலை அறிக்கை பற்றி வேளாண்மை துறை அமைச்சர் வினோத் அளித்த முக்கிய தகவல்...

Updated On : 11 ஜூலை 2026, 4:22 pm IST
அமைச்சர் வினோத்
பகிர்:

வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளின் குரலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று வேளாண்மை துறை அமைச்சர் வினோத் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 2026-27-ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பது தொடர்பான விவசாயிகள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத், விவசாயிகளின் நலனை முன்னிறுத்திப் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அரசுக்கு விவசாயிகளின் நலனே முன்னுரிமை

Advertisement

Advertisement

கூட்டத்தில் அமைச்சர் வினோத் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சரின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. கடுமையான நிதி நெருக்கடியிலும் கூட, சுமார் 14 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளுக்கு 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத சூழலிலும், டெல்டா மற்றும் பிற மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக 134 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பில் குறுவை சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது" என்று குறிப்பிட்டார்.

நவீன தொழில்நுட்பங்களை நோக்கி நகர்தல்

வேளாண்மையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், "உலகம் முழுவதும் விவசாயம் வேகமாக மாறிவருகிறது. செயற்கை நுண்ணறிவு, துல்லிய வேளாண்மை, ட்ரோன் பயன்பாடு மற்றும் காலநிலை முன்னறிவிப்பு போன்ற நவீன தொழில்நுட்பங்களை நம் மாநில விவசாயிகளும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இதற்கான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்களை அரசு தொடர்ந்து வழங்கும்" என்றார். மேலும், 2026-27 ஆம் ஆண்டிற்கு 131 லட்சத்து 36 ஆயிரம் மெட்ரிக் டன் உணவுதானிய உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மதிப்புக்கூட்டல் மற்றும் சந்தை வாய்ப்புகள்

விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்ய, மதிப்புக்கூட்டல் மற்றும் உணவு பதப்படுத்துதலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். குறிப்பாக, அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைக்க குளிர்பதனக் கிடங்குகள், சேமிப்புக் கிடங்குகள் மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

அதிகாரிகளுக்கு அமைச்சர் கடும் எச்சரிக்கை

விவசாயிகளின் பிரச்னைகளை அணுகும் விதம் குறித்துப் பேசிய அமைச்சர், "விவசாயிகள் அலுவலகத்திற்கு வரும்போது, அவர்களை வெறும் மனுதாரர்களாகப் பார்க்காமல், ஒரு குடும்ப உறுப்பினராகக் கருதி அதிகாரிகள் செயல்பட வேண்டும். அவர்களின் நேரத்திற்கும் உழைப்பிற்கும் மதிப்பளித்து, பிரச்னைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க வேண்டும்" என்று அதிகாரிகளுக்குக் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்தார்.

விவசாயிகளின் பங்களிப்பு அவசியம்

இறுதியாகப் பேசிய அமைச்சர், "இந்தக் கூட்டம் ஒரு தொடக்கம் மட்டுமே. விவசாயிகள் தங்கள் ஊரின் பிரச்னைகளைச் சொல்வதுடன், அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் தாங்கள் கண்ட வெற்றி சார்ந்த சாகுபடி முறைகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டும். உங்களின் ஆலோசனைகளைக் கொண்டே சிறப்பான வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்படும்" என்று கேட்டுக்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் 10 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

summary

Agriculture Minister Vinoth stated that importance will be given to the voice of farmers in the Agriculture Budget.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments