பெண்களைத் துரத்தும் தவெக நிர்வாகிகள்! சிங்கப்பெண் பாதுகாப்புப் படை தூங்குகிறதா? நயினார் நாகேந்திரன்
பெண்கள் பாதுகாப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு...
கரூர் அருகே இளம்பெண்ணை தவெக நிர்வாகி பின்தொடர்ந்து தொல்லை கொடுத்த சம்பவத்தில் காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"பெண்களை துரத்தும் தவெக நிர்வாகிகள், தூங்குகிறதா சிங்கப்பெண் பாதுகாப்புப் படை?
Advertisement
Advertisement
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய திருமணமான பெண்ணை, பின் தொடர்ந்தும், பாலியல் ரீதியாக சைகைகள் காட்டியும் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெகவின் ஒன்றிய செயலாளர் ரமேஷ் என்பவரை, பொதுமக்களே தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்ததாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிப்பது மட்டுமன்றி வன்மையான கண்டனத்திற்குரியது.
அதிலும் குறிப்பாக, இந்த தொடர் பாலியல் தொல்லை குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தும்கூட, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டுவது, காவல்துறையை நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறனையே கேள்விக்குறியாக்குகிறது.
"தவெகக்காரன்" என்ற அடைமொழி குற்றங்கள் செய்வதற்கான அடையாள அட்டையாக மாறி வருகிறதா? உள்ளூர் தவெக நிர்வாகிகளின் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை அஞ்சுகிறதா?
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் பாதுகாப்பு படை என்ன செய்து கொண்டிருக்கிறது? உள்ளிட்ட மக்களின் கேள்விகளுக்கான பதிலை முதல்வர் தேடினாலே, அவரின் ஆட்சியின் லட்சணம் தெரிந்து விடும்.
எனவே, இனியாவது ஜோசப் விஜய் தனது கட்சி நிர்வாகிகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்! பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.