அரசுப் பேருந்து கட்டணத்தில் 500 ஆம்னி பேருந்துகளை இயக்க தயார்: ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம்
ஆண்டு முழுவதும் 500 ஆம்னி பேருந்துகளை அரசுப் பேருந்து கட்டணத்தில் இயக்க தயாராக இருப்பது பற்றி...
அரசுப் பேருந்து கட்டணத்தில் 500 ஆம்னி பேருந்துகளை இயக்க தயாராக இருப்பதாக அனைத்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் பாண்டியன், விழா காலங்களில் கட்டண உயர்வு என்கிற குற்றச்சாட்டு பல்வேறு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆண்டு முழுவதும் 500 ஆம்னி பேருந்துகளை அரசுப் பேருந்து கட்டணத்தில் இயக்க முதல்வரிடம் அனுமதி கோரியுள்ளோம்.
அந்த 500 பேருந்துகளை அரசுப் பேருந்து கட்டணத்திலேயே இயக்குவதற்கு தயாராக உள்ளோம். கடந்த காலத்தில் ஆர்டிஓ அலுவலகத்தில் பர்மிட் வாங்குவதற்கு ரூ. 5 லட்சம் கொடுத்தோம். தற்போது அதிகாரிகள் ஒரு ரூபாய் லஞ்சம் இல்லாமல் ஆம்னி பேருந்து பர்மிட்டுக்கான அனுமதி கொடுக்கிறார்கள். ஆர்டிஓ அலுவலகத்துலதான் முதல் ஊழலே இருக்கும். ஆனா தற்போது யாருமே லஞ்சம் கேக்குறதே இல்ல.
Advertisement
Advertisement
இந்த மாற்றத்தை நாங்க வரவேற்கிறோம். லஞ்சம் இல்லாததால் அரசு கட்டணத்திலேயே தற்போது ஆம்னி பேருந்துகளை இயக்க முன் வந்துள்ளோம் என்றார். பண்டிகை காலங்களில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வர். அவ்வாறு செல்பவர்கள் ரயில், அரசுப் பேருந்துக்கு அடுத்ததாக ஆம்னி பேருந்தை தேர்ந்தெடுப்பர். ஆனால் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துக் கட்டணம் விண்ணைத் தொடுமளவுக்கு உயர்ந்து இருக்கும்.
இதுகுறித்து ஒவ்வொரு முறையும் மக்கள் தரப்பில் இருந்து புகார் தெரிவிக்கப்படும். கட்டணத்தை உயா்த்தும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு, அது தொடா்பாக புகாா் கொடுக்க இலவச தொலைபேசி எண் அறிவிப்பு, ஆய்வு உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகள் இருந்தாலும் ஆம்னி பேருந்து கட்டண உயா்வுக்கு இதுவரை உரிய தீா்வு காணப்படவில்லை என்று சொல்லலாம்.
இந்த நிலையில் அரசுப் பேருந்து கட்டணத்தில் ஆம்னி பேருந்துகளை இயக்க தயாராக இருப்பதாக ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் சங்கத்தினர் தெரிவித்திருப்பது நல்ல முன்னெடுப்பதாக கருதப்படுகிறது.
The All Omni Bus Owners and Operators Association has announced that they are ready to operate omni buses at government bus fares.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.